கலவர பூமியான அசாம், திரிபுரா: ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு… இணையதள சேவை முடக்கம்

திஸ்பூர்: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்த்து அசாமின் கவுகாத்தியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறி இருக்கிறது. மாநிலங்களவையில் அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்திருக்கிறார்.

ஆனால், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. திரிபுராவின் மனுகாட் பகுதியில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டன.

இணையதளம், எஸ்எம்எஸ் சேவைகள், முடக்கப்பட்டுள்ளன. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திரிபுராவை தொடர்ந்து, அசாமிலும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது. திஸ்பூரில் பேருந்து மர்ம நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.

அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் இணைய தள சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. திப்ருகரில் மதுக்கடைகளை மூட ஆணையிடப்பட்டுள்ளது.

12 ரயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.10 ரயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.