புதுடெல்லி: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு நிதித் திரட்டும் வகையில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை நடத்த வேண்டுமென யோசனை தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் சோயப் அக்தர்.

கொரோனா வைரஸ் தொற்றால், இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு விளையாட்டு நட்சத்திரங்கள் பலர் நிதியளித்து வருகின்றனர். இதில் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அடக்கம்.

இந்நிலையில், பாகிஸ்தானின் சோயப் அக்தர் ஒரு அதிரடி யோசனையை தெரிவித்துள்ளார். கொரோனா எதிர்ப்பு நடவடிக்கை நிதிக்காக, இந்தியா – பாகிஸ்தான் பங்கேற்கும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை நடத்த வேண்டும் என்றுள்ளார் அவர்.

“இத்தொடரில், கோலி சதமடித்தாலும், பாபர் ஆஸம் சதமடித்தாலும் இருநாட்டவருக்குமே மகிழ்ச்சிதான். எது நடந்தாலும், இரு அணிகளுமே வென்றதாக இருக்கட்டும்.
இப்போட்டிகளை அதிக ரசிகர்கள் கண்டு களிப்பார்கள். இதில் கிடைக்கும் நிதியை இருநாடுகளுக்கும் பகிர்ந்து கொடுக்கலாம்” என்றுள்ளார் அக்தர்.