அரசுக்கு எதிரான கருத்து:  பத்திரிகையாளர்களின் ஃபேஸ்புக் பக்கங்கள் முடக்கப்படும் அவலம்!

ரசுக்கு எதிரான கருத்துக்களைப் பதிந்து வருவதாக கூறி கடந்த இருவாரங்களில் 12 பத்திரிகையாளர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

அயோத்தி வழக்கில், முன்பு செய்த விசாரணையை மறுபரிசீலனை செய்யப் போவதில்லை என்றும் கோவில்கள் மதத்துடன் இணைந்தது அல்ல என்றும் அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பு குறித்து பத்திரிகையாளர்கள் பலர் தங்கள் கருத்துக்களை பேஸ்புக்கில் பதிந்தனர். இப்படி கருத்து தெரிவித்தவர்களில், தீர்ப்பை வரவேற்காமல் விமர்சித்து எழுதியவர்களின் பேஸ்புக் கணக்குகள்  முடக்கப்பட்டன.

ஜனதா கா ரிபோர்டர் (Janata Ka Reporter) என்ற இணையதளத்தில் பணிபுரியும் ரிஃபட் ஜாவத், மற்றும் காரவான் டெய்லி வெப்ஸைட்டில் பணிபுரியும் பல பத்திரிகையாளர்களின் கணக்குகளும் இப்படி முடக்கப்பட்டுள்ளன.

பத்திரிகையாளர் ரிஃபட் ஜாவத், தன் ஃபேஸ்புக் கணக்கு ஏற்கெனவே அவர்  ராஃபேல் ஊழல் குறித்து முதன் முதலில் எழுதிய நேரத்திலும் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின் மீண்டும் அயோத்தி தீர்ப்பு வெளியானபோது கருத்து தெரிவித்ததை அடுத்து  தன் ஃபேஸ்புக் கணக்கு செயல்படாமல் போனதாக தெரிவித்தார்.

இதேபோல டைனிக் பாஸ்கர் (Dainik Bhaskar)செய்தித்தாளின் ஆசிரியர்களான பிரேமா நிகி மற்றும் அவரது கணவர் அஜய் பிரகாஷ் ஆகியோரின் ஃபேஸ்புக் கணக்குகளும்  அந்நிறுவன ஊழியர்கள் ஐவரின் கணக்குகளும் முடக்கப்பட்டன.

அரசுக்கு எதிராக கருத்தை பதிவு செய்ததாக காரவேன் டெய்லி (Caravan Daily) எடிட்டர் மும்தாஸ் ஆலமின் ஃபேஸ்புக் கணக்கும் முடக்கப்பட்டது. இதேபோல பொல்டா ஹிந்துஸ்தான் (Bolta Hindustan) நிறுவன ஊழியர்கள் ஐவரின் கணக்குகளும் முடக்கப்பட்டன.

ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கப்படுவது குறித்து, இந்தியாவின் ஃபேஸ்புக் தகவல் தொடர்பு இயக்குநர் அம்ரித் அஹுஜாவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் இரண்டு நாட்களுக்கு மேலாகியும் அவரிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.