பாக்தாத்: அரசாங்கத்தின் ஊழல், மோசமான சேவைகள் மற்றும் வேலை பற்றாக்குறை ஆகியவற்றால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் டயர்களை எரித்து, முக்கிய வழிகளை அடைத்ததால் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஈராக்கின் எண்ணெய் வளம் நிறைந்த தெற்குப் பகுதியை ஆக்கிரமித்தது.

நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் கிட்டத்தட்ட 85% பங்கைக் கொண்ட தெற்கு மாகாணமான பாஸ்ராவில், எதிர்ப்பாளர்கள் நகர மையத்தில் டயர்களை எரித்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியதில் இருந்து குறைந்தது 342 பேர் இறந்துள்ளனர், அப்போது ஆயிரக்கணக்கான ஈராக்கியர்கள், பெரும்பாலும் இளைஞர்கள், ஊழல் மற்றும் மோசமான சேவைகளைக் கண்டித்து வீதிகளில் இறங்கினர்.

உம் கஸ்ர் துறைமுகத்திற்கு அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நேரடி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிகிறது, ஈராக்கிய மனித உரிமைகளுக்கான ஹை கமிஷன் அதிகாரியின் கூற்றுப்படி, மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

எதிர்ப்பாளர்கள் நாட்டின் முக்கிய பொருட்களின் துறைமுகமான உம் கஸ்ருக்கு செல்லும் சாலைகளை வெட்டி, அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்தினர். பாதுகாப்பு படையினர் கடந்த 21ம் தேதியன்று போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.

தெற்கு மாகாணமான நசீரியாவில், எதிர்ப்பாளர்கள் முக்கிய வழித்தடங்களையும் பிரதான பாலங்களையும் எரியும் டயர்களைக் கொண்டு தடுத்தனர்.

பாக்தாத்தில், அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான மோதல்கள் நான்காவது நாளாக தொடர்ந்ததால் குறைந்தது 13 பேர் காயமடைந்தனர்.