தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்:  நடிகர் ரஜினிகாந்துக்கு விசாரணை ஆணையம் சம்மன்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு ஜனவரி 19ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு,  விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது, 20218ம் ஆண்டு  மே 22ந்தேதி அன்று, போராட்டக்காரர்கள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது. இதில், சம்பவ இடத்திலேயே  13 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து 2018ம் ஆண்டு மே மாதம் 30ந்தேதி  நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார். அப்போது பாதிக்கப்பட்ட 48 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிதி அளித்தார். பிறகு  செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, சமூக விரோதிகளே தூத்துக்குடி வன்முறைக்கு காரணம் என்று தெரிவித்தார்.

துத்தூக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழகஅரசு நியமித்து. இதையடுத்து, நீதிபதி அருணாஜெகதீசன் பல்வேறு கட்டங்களாக , ஏராளமானோரை அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஏற்கனவே ரஜினி கூறிய கருத்து தொடர்பாக பதில் அளிக்க விசாரணை ஆணையம், ரஜினிக்கு சம்மன் அனுப்பியது. அதற்கு தனது வழக்கறிஞர் மூலம் பதில் தெரிவித்த ரஜினி, , தான் தூத்துக்குடி  வந்தால் தேவையற்ற பிரச்சினை உருவாகும் என்றும், அதனால் தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து அவருக்கு  மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது, ஜனவரி மாதம் விசாரணைக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆஜராகலாம் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது, ரஜினி விசாரணைக்கு ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி 19ம் தேதி விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.