புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட பிறகும், அறிகுறி வெளியாகாமல் நோயைப் பரப்பிக்கொண்டு பலர் இருக்கக்கூடும் என்பதால், விரைவான ஆன்டிபாடி பரிசோதனைகளை நடைமுறைப்படுத்தலாம் என்று வல்லுநர் குழு ஆலோசனைக் கூறியுள்ளது.

இந்தியாவின் மிக முக்கியமான மருத்துவ மற்றும் பொது சுகாதார நிபுணர்களை உள்ளடக்கிய குழு, அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில், ஆபத்திலுள்ள அனைவருக்கும் விரைவான ஆன்டிபாடி பரிசோதனைகள் செய்ய வேண்டும். தனியார் துறையை ஈடுபடுத்தி, தொற்று பரவிய பகுதிகளுக்கு வெளியேயும் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டுமென கூறியுள்ளது.

இதனை அரசு ஏற்றுக்கொண்டால், அறிகுறி உள்ளவர் மற்றும் அறிகுறி இல்லாதவர் என பலருக்கும் விரைவாக சோதனை நடத்தலாம். வளர்ந்துவரும் சூழ்நிலைக்கு ஏற்ப, ஒவ்வொரு 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை நெறிமுறைகளை மாற்றி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.

எளிதான ரத்தப் பரிசோதனைகளில் மேற்கூறிய ஐஜிஎம் மற்றும் ஐஜிஜி ஆகிய இரண்டு ஆன்டிபாடிகள் காணப்பட்டால், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படும். ஆன்டிபாடிகள் தன்மை ஆளுக்கு ஆள் வேறுபடும் என்பதால், தொற்று ஏற்பட்டு, 21 நாட்கள் கடந்த நபரை பரிசோதித்தால், முடிவுகள் துல்லியமாக இருக்கும் என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

அந்த நடைமுறை, நோய்த்தொற்றைக் கண்டறிய, தொண்டை திரவத்தை எடுத்து பரிசோதிக்கும் ஆர்டி-பிசிஆர் சோதனை போல் கடினமானதில்லை. நேரமும் அதிகம் எடுக்காது. 20 நிமிடங்களில் முடிவு தெரிந்துவிடும். தொற்று ஏற்பட்டு, இதுவரை கண்டறியப்படாமல் இருப்பவர்களை இதன் மூலம் கண்டறியலாம்.

அதிகப் பரிசோதனைகள் மூலம் எங்கெல்லாம் வைரஸ் பரவல் உள்ளது என்ற வரைபடத்தை இப்பரிசோதனை அளிக்கும். இருப்பினும், தொற்று ஏற்பட்டு 3 வாரம் கடந்த நபர்களுக்கு மட்டுமே இப்பரிசோதனை சரியான முடிவுகளை அளிக்கும். சீனாவும், சிங்கப்பூரும் தொற்றுநோயை கண்காணிக்க இச்சோதனையை பயன்படுத்துகின்றன. இத்தாலி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், யாரெல்லாம் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள் மற்றும் யாரையெல்லாம் தனிமைப்படுத்த வேண்டும் என்பதை கண்டறிந்து முடிவுசெய்ய இம்முறையைப் பயன்படுத்துகின்றன.

ஆனாலும் ஆர்டி – பிசிஆர் நடைமுறைதான் துல்லியமான மற்றும் அறிகுறியின் ஆரம்ப காலத்திலேயே கொரோனாவை கண்டறியும் பரிசோதனை. இதில் முடிவுகள் தெரிய நீண்ட நேரம் ஆவது, அதிக மக்கள்தொகை கொண்ட நம் நாட்டுக்கு பின்னடைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.