வாஷிங்டன்: கொரோனா நோயாளிகளுக்கு தரப்படும் மலேரியா எதிர்ப்பு மருந்தால் இறப்பு விகிதிம் அதிகரிக்கும் என்று அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்து இருக்கும் நாடு அமெரிக்கா. அந்நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு மலேரியா உள்ளிட்ட நோய்களுக்கு வழங்கப்படும் இந்திய தயாரிப்பான, ஹைட்ராக்சி க்ளோரோகுவின் என்ற மருந்து வழங்கப்படுகிறது.
கொரோனா சிகிச்சையில், நல்ல பலன் தருவதாக கூறப்பட்டதை அடுத்து, இந்தியாவுக்கு கடும் அழுத்தம் கொடுத்து, அமெரிக்கா அந்த மருந்துகளை வாங்கியது. ஆனால், அந்த மருந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மருந்தை தான் எடுத்துக் கொள்வதாக அதிபர் டிரம்ப்பும் அறிவித்து இருந்தார். இந் நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு மலேரியா எதிர்ப்பு மருந்து தந்தால் இறப்பு விகிதிம் அதிகரிக்கும் என்று அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து, லான்செட் என்ற மருத்துவ இதழில் ஆய்வு,கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஹைட்ராக்சி க்ளோரோகுயின் மருந்தை எடுத்துக் கொள்பவர்கள் திடீர் மரணத்தை சந்திப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது நன்மை பயப்பது அல்ல, தீங்கை விளைவிக்கும் என்று இருதயநோய் நிபுணரும் ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி மொழிபெயர்ப்பு நிறுவனத்தின் இயக்குநருமான எரிக் டோபோல் கூறினார். இந்த மருந்தை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு மரணம் நிச்சயம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஸ்டான்போர்டு யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆப் மெடிசின் தடுப்பு இருதயவியல் இயக்குனர் டேவிட் மரோன், இந்த கண்டுபிடிப்புகள் கொரோனா வைரஸ் தடுப்பு அல்லது சிகிச்சைக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கைக்கு எந்த காரணமும் இல்லை என்று கூறினார்.