இஸ்ரோவின் துணை நிறுவனம் ஆன்ட்ரிக்ஸ் – இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்பரேஷன் என்ற நிறுவனம், இந்தியாவின் தனியார் நிறுவனமான டேவாஸ் மல்டிமீடியா என்ற நிறுவத்திற்கு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு தொடுக்கப்பட்ட சேட்டிலைட் டீல் வழக்கில் இந்த உத்தரவை அளித்துள்ளது வாஷிங்டனின் மேற்கு மாவட்ட நீதிமன்றம். இதன்மூலம் 9 ஆண்டுகள் நீடித்த வழக்கிற்கு விடை கிடைத்துள்ளது.

இழப்பீட்டுத் தொகையான 562.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது வட்டியுடன் சேர்த்து 1.2 பில்லியன் அளவிற்கு உயர்ந்துள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு ஆன்ட்ரிக்ஸ் – டேவாஸ் இடையிலான ஒப்பந்தப்படி, ஜிசாட் 6 மற்றும் ஜிசாட் 6ஏ ஆகிய இரண்டு செயற்கைக் கோள்களை கட்டமைத்து ஏவி, அவற்றை இயக்குவதற்கு ஒப்புக்கொண்டது ஆன்ட்ரிக்ஸ்.

இதன்படி, 70 எம்எம்இஸட் எஸ்-பாண்ட் அலைக்கற்றையை டேவாஸ் நிறுவனத்திற்கு கிடைக்கச் செய்ய வேண்டும். இந்நிலையில், ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் விண்வெளியில் பழுதாகி கைவிடப்பட்டதால், 2011ம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தது ஆன்ட்ரிக்ஸ்.

இதனையடுத்து, அதன்மீது உச்சநீதிமன்றம் உள்பட பல்வேறு சர்வதேச நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தது டேவாஸ். இந்நிலையில், அமெரிக்க நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.