மும்பை

பாஜக ஆதரவு நடிகரான விவேக் ஓபராய் தனது டிவிட்டரில் ஐஸ்வர்யா ராய் குறித்து பதிந்தது அவரது தரத்தை பிரதிபலிக்கிறது என மற்றொரு பாஜக ஆதரவு நடிகர் அனுபம் கேர் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் திருமணத்துக்கு முன்பு சல்மான் கான் மற்றும் விவேக் ஓபராய் குறித்து கிசுகிசுக்கப்பட்டார்.   ஆனால் அவர் இதில் எந்த தகவலையும் ஒப்புக் கொள்ளவில்லை.    பிரபல பாலிவுட் நடிகரும் மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.  இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

பிஎம் நரேந்திர மோடி படத்தில் மோடி வேடத்தில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகரும் ஐஸ்வர்யா ராயுடன் கிசுகிசுக்கப்பட்டவருமான விவேக் ஓபராய் தீவிர பாஜக ஆதரவாளர் ஆவார்.  அவர் பாஜக குறித்த கருத்துக் கணிப்புக்கு ஐஸ்வர்யா ராய் படத்தை சல்மான் கான், தான் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோருடன் வெளியிட்டுள்ளார்.

மக்கள் இந்த  பதிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.   மற்றொரு பாஜக ஆதரவு நடிகரான அனுபம் கேர் இந்த பதிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அனுபம் கேர் தனது டிவிட்டரில், ”இது மிகவும் அவமானகரமானது.  விவேக் ஓபராய் இவ்வாறு பதிந்தது அவருடைய தரத்தை பிரதிபலிக்கிறது.  அவர் இவ்வாறு நடந்துக் கொண்டிருக்கக் கூடாது.” என தெரிவித்துள்ளார்.  இதே கருத்தை நடிகை ஈஷா குப்தா உள்ளிட்ட பலரும் தெரிவித்துள்ளன்ர்.

.இதற்கு தேசிய பெண்கள் நல ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  அத்துடன் இது குறித்து நோட்டிஸ் ஒன்றை அனுப்பிய ஆணையம் உடனடியாக இது குறித்து வெளிப்படையாக ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய மகளிடம் மன்னிப்பு கோர வேண்டும் என நோட்டிசில் குறிப்பிட்டிருந்தது.  பிரபல நடிகையும் காங்கிரஸ் வேட்பாளருமான ஊர்மிளா இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

பலருடைய கண்டனத்துக்கு பிறகு இதற்கு விவேக் ஓபராய் மன்னிப்பு கோரி உள்ளார்.  தனது டிவீட்டை நீக்கிய அவர், “நமக்கு நகைச்சுவையாக தோன்றுவது வேறு சிலருக்கு தவறாக தெரிகிறது.   நான் எனது வாழ்க்கையில் 2000 க்கும் மேற்பட்ட பெண்களை சந்தித்துள்ளேன்.  எனது மனதை  புண்படுத்தியவர்களையும் நான் பதிலுக்கு புண்படுத்தியதில்லை.  எனது டிவிட்டினால் யாரும் மனவருத்தம் அடைந்திருந்தால் மன்னிப்பு கோருகிறேன்” என பதிந்துள்ளார்