தொடர் மிரட்டல்கள் – டிவிட்டர் கணக்கை நீக்கிய அனுராக் கஷ்யப்!

தனது குடும்பத்தினர்களுக்கு, குறிப்பாக தனது பதின்ம வயது மகளுக்கு தொடர் மிரட்டல்கள் வருவதால், தனது டிவிட்டர் கணக்கை நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார் பாலிவுட் பிரபலம் அனுராக் கஷ்யப்.

சமூகவலைதளங்களில் வெளிப்படையாக குறிப்பாக மோடி அரசின் கொள்கைகளை எதிர்த்து கருத்து தெரிவிக்கும் திரைப் பிரபலங்களில் இவர் முக்கியமானவர். இந்நிலையில் தனது குடும்பத்தினர்களுக்கு வரும் தொடர் மிரட்டல்கள் காரணமாக, இவர் தனது டிவிட்டர் கணக்கை நீக்கியுள்ளார்.

“இந்த நாட்டில் ஒரு கருத்தை அச்சமின்றி பேச முடியவில்லை என்றால், அதைப் பேசாமல் இருப்பதே மேல். இந்தப் புதிய இந்தியாவில் எங்கும் குண்டர்கள் ராஜ்யமாகவே இருக்கிறது. அதுவே வாழ்வின் புதிய வழியாகிவிட்டது. இங்கே பகுத்தறிவு விவாதம் என்பதற்கு இடமில்லை. இத்தகைய புதிய இந்தியா செழிப்பதற்கு வாழ்த்துக்கள்” என்றுள்ளார்.

கஷ்யப்பின் குடும்பத்தினருக்கு மிரட்டல் வருவது இது முதன்முறையல்ல. நரேந்திரமோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, இவரின் குடும்பத்தினருக்கு வந்த மிரட்டல்கள் அதிகம். இவரின் பதின்ம வயது மகளுக்கு பாலியல் பலாத்கார மிரட்டல்கள் வந்துள்ளன.

தனது மகளுக்கு மோசமான செய்திகளை அனுப்பிய பலரும், பிரதமர் நரேந்திர மோடியைப் பின்பற்றுபவர்கள் என்று தெரிவித்துள்ளார் கஷ்யப்.