மீண்டும் பதட்டம்: தமிழக-கர்நாடக எல்லையில் கன்னடர்கள் போராட்டம்!

­­

பெங்களூரு:

காவிரி பிரச்சினை தொடர்பாக நடைபெற்று வரும் பிரச்சனையை தொடர்ந்து  இன்று இரண்டாவது நாளாக கர்நாடக எல்லையில் கன்னடர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

1vattal

காவிரி பிரச்னைசியில், தமிழகத்தை எதிர்த்து நிற்கும் கன்னட அமைப்புகள் இருமாநில எல்லைகளில் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றன. அதனால், அங்கு, தமிழக வாகனங்களுக்கு இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இரு மாநில போலீசாரும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவிரியில் தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம்   உத்தரவிட்ட பின்னரே, தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டது கர்நாடக அரசு.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னட அமைப்புகள் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டன. கடந்த 6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை ஐந்து  நாள்களுக்கு தமிழக பேருந்துகள் எதுவும் பெங்களூருவுக்குள் அனுப்பாமல் ஒசூரிலே நிறுத்தி வைக்கப்பட்டது.

கடந்த 12-ஆம் தேதி வரலாறு காணாத  வன்முறையை கர்நாடகா கட்டவிழ்த்துவிட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தீ வைத்து கொளுத்தப்பட்டன. தமிழர்கள் ஆங்காங்கே தாக்கப்பட்டனர். இதையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு  துப்பாக்கி சூடு நடத்தி கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

கடந்த பன்னிரண்டு நாளாக தமிழக அரசு பேருந்துகள் பெங்களூருவுக்கு இயக்கப்படவில்லை. கர்நாடகா அரசு பேருந்தும் ஒரு வாரகாலமாக தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

இதற்கிடையில், தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் ஓசூர் அருகே இருமாநில எல்லையில் இன்று போராட்டம் நடத்துகின்றனர். தமிழக எல்லையான ஓசூர் அருகே அத்திப்பள்ளி எல்லையில் போராட்டம் நடைபெறும் என்று கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

அதே போல மாநில எல்லையில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நடைபெற கூடிய போராட்டத்தில் கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பு பங்கேற்கும் என அதன் மாநில துணைத்தலைவர் புனித் தெரிவித்தார்.

மேலும் கன்னட ஜாக்குருதி வேதிகே அமைப்பும் இந்த போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாக அந்த அமைப்பின் மாநில தலைவர் மஞ்சுநாத் தேவா தெரிவித்தார்.

இதைத்தவிர கன்னட சேனா, ஜெய் கர்நாடகா உட்பட பல்வேறு கன்னட அமைப்பினர் இன்று ஓசூர் அருகே மாநில எல்லையில் போராட்டம் நடத்த இருக்கிறார்கள்.

ஓசூர் அருகே தமிழக – கர்நாடக எல்லையில் கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்துவதால் மாநில எல்லையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதி மிகுந்த பரபரப்பாக காணப்படுகிறது.

போராட்டத்தை தடுக்க கர்நாடக அரசு எந்தவித முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.