லே: லடாக் பிராந்தியம் காஷ்மீரிலிருந்து பிரிக்கப்பட்டு தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட தொடக்க நாட்களில் அந்த மக்கள் மகிழ்ச்சியாக உணர்ந்தார்கள். ஆனால், தற்போது அவர்களின் மகிழ்ச்சி காணாமல் போய் அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் தனித்தன்மை குறித்த கவலை தொற்றிக்கொண்டுள்ளது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறப்பு அதிகாரச் சட்டம் 370 நடைமுறையில் இருந்ததால், லடாக்கில் அந்நியர்களோ அல்லது பெருமுதலாளிகளோ உள்நுழைந்து தங்களின் லாப வேட்டை முதலீடுகளை மேற்கொள்ள முடிந்ததில்லை மற்றும் சொத்துக்களையும் வாங்க முடிந்ததில்லை.

ஆனால், தற்போதைய நிலையில் எதுவுமே தடையில்லை என்றாகிவிட்டது. அந்த மக்கள் ஒரு 6 மாதகாலம் சுற்றுலாவில் சம்பாதித்து, அந்த ஆண்டின் அடுத்த 6 மாதங்களை ஓட்டிவிடுவார்கள். ஆனால், இனிமேல் பெருமுதலாளிகளின் வேட்டைக் காடாக லடாக் மாற்றப்படும்போது இவர்கள் தங்களின் சுயதொழில் வாய்ப்பை இழப்பார்கள்.

சுயமாக சம்பாதித்த நிலை போய், அந்நியர்களுக்கு வேலையாட்களாய் மாற்றப்படுவார்கள். உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மலை மாநிலங்களின் நிலைமை இப்படித்தான் மாற்றப்பட்டது. நம்மால் வெளியிலிருந்து முழு வலிமையுடன் வரும் அந்நியர்களுடன் மோத முடியாது.

எனவே, சுற்றுலாப் பயணிகள் வரவேற்கப்படுகிறார்கள். ஆனால், யூனியன் பிரதேசத்தின் நடவடிக்கைகளை மண்ணின் மைந்தர்கள்தான் கவனிப்பார்கள் என்பதே மக்களின் விருப்பம். எங்கள் மக்கள் மிகவும் எளிமையானவர்கள் என்று அங்கிருந்து வரும் குரல்களின் கூற்றாக உள்ளது.