இந்த தேர்தலில் எந்தவொரு அதிமுக தொண்டனும் அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டான்: செம்மலையால் தாக்கப்பட்ட அதிமுக தொண்டர் கொந்தளிப்பு (வீடியோ)

சேலம்:

ந்த தேர்தலில் எந்தவொரு அதிமுக தொண்டனும் அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டான் என்று அன்புமணிக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது,  பா.ம.க அன்புமணியிடம் கேள்வி கேட்டதற்காக,  அதிமுக எம்எல்ஏ செம்மலையால் தாக்கப்பட்ட அதிமுக தொண்டர்  செந்தில்குமார் கூறி உள்ளார். தங்களுடைய ஓட்டு ராகுல்காந்திக்கே என்றும் தெரிவித்து உள்ளார்.

செந்தில்குமார்                                               – செம்மலையால் தாக்கப்படும் காட்சி

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செம்மலை வாக்கு சேகரித்து வந்தார். தர்மபுரி அடுத்த மேச்சேரி கிராமத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ், பேசிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த அதிமுக தொண்டர் செந்தில்குமார், “கடந்த முறை இங்கதான வெற்றிபெற்றீர்கள். அதுக்கு அப்புறம் எங்க போனீங்க. 5 வருஷமா எங்களுக்கு என்னைய்யா செஞ்சீங்க. 8 வழிச் சாலைக்கு எதிராக நாங்க போராடியபோது எங்க போனீங்க ஐயா” என்று அன்புமணியிடம்  சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அன்புமணி அருகில் நின்றிருந்த மேட்டூர் எம்.எல்.ஏ செம்மலை, செந்தில்குமாரின் கன்னத்தில்அறைந்து அப்புறப்படுத்தச் சொன்னார். இதையடுத்து, அதிமுக, பாமக தொண்டர்கள் செந்தில்குமாரை தாக்கியதால், அவர் மயக்கம் அடைந்தார். இதையடுத்து, அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இந்த சம்பவத்தை எதிர்பாராத அன்புமணி பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டுகிளம்பினார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக தொண்டர் ஒருவர் பாமக தலைவர்கள் முன்னிலையில் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மட்டுமல்லாத தமிழகம் முழுவதும் தீயாய் பரவியது. இதையடுத்து அதிமுக தொண்டர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், செம்மலையால் தாக்கப்பட்ட அதிமுக தொண்டரான செந்தில் குமார் கூறியிருப்பதாவது,

நான்  25 ஆண்டுகாலம்  அதிமுகவில் இருந்து கட்சிக்காக உழைந்து வந்துள்ளேன்… தற்போது நடைபெற்ற சம்பவம், தமிழ்நாடு முழுவதும் அதிமுக தொண்டனுக்கு பாதுகாப்பில்லை என்பதை உறுதிபடுத்தி உள்ளது… தொண்டனுக்கு பாதுகாப்பு என்பது….அம்மாவோடு போச்சு… என்று வருத்தமுடன் கூறினார்.

மேலும், அதிமுக தொண்டனோட பவர் இனிமேல் தெரியும் என்றவர், அதன் தாக்கம்  இந்த தேர்தல்ல தெரியும்… அதிமுக தொண்டர் ஒருத்தர்கூட இனிமேல் வேலை செய்ய மாட்டாங்க… அதிமுக காரங்க பாமககிட்ட சரண்டர் ஆகிட்டாங்க.. பாமககூட சேர்ந்துகிட்டு செம்மலை தொண்டர்களை அடிக்கிறது… முன்னப் பின்ன பேசுறது… அதனால இனிமேல்  தொண்டர்கள் வேலை செய்ய மாட்டாங்க…என்று அதிரடியாக தெரிவித்தார்.

தான் தாக்கப்பட்டது  அதிமுக தொண்டனுக்கு தெரியும்.. இவ்வளவு உழைச்ச எனக்கே இந்த நிலைமைன்னா என்று கேள்வி எழுப்பியவர்,  ஆயிரக்கணக்கான , லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும்  அதிருப்தியில் இருக்கிறார்கள்…  இந்த முறை நிச்சயமாக அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டோம்… என்று அதிரடியாக கூறி உள்ளார்.

மேலும், தான் எந்த கட்சியையும் சாரவில்லை என்று கூறியுள்ள செந்தில்குமார், அடிப்படையில் நான் ஒரு விவசாயி என்றும் தெரிவித்தார்.

நடைபெற உள்ள தேர்தலில் ராகுல்காந்தி பிரதமராவதற்காக அவருக்கு ஓட்டு போடுவோம் என்றவர், அதன் கூட்டணி கட்சிக்கும் ஓட்டுபோடுவோம் என்றும் தெரிவித்து உள்ளார்.

செந்தில்குமாரின் வீடியோ…

 

 

 

Leave a Reply

Your email address will not be published.