பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால் மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கும்…..நிதின் கட்காரி

--

டில்லி:

பெட்ரோல், டீசல் விலை குறைத்தால் மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கும் என்று நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்காரி கூறுகையில், ‘‘பெட்ரோல், டீசலின் விலையை குறைக்க மானியம் வழங்கினால் இதர மக்கள் நல திட்டங்கள் பாதிக்கும். கச்சா எண்ணைய் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இதற்கு காரணம் இந்தியா உலகளாவிய பொருளாதாரத்துடன் தொடர்பு வைத்திருப்பது தான்.

பெட்ரோல், டீசல் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றால், அதிக விலைக்கு கொள்முதல் செய்து இங்கு மானியத்துடன் தான் விற்பனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் இதர மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி இல்லாத நிலை ஏற்பட்டுவிடும். கிராமங்களுக்கு இலவச காஸ் இணைப்பு, கிராமப் புற மின் திட்டங்கள், முத்ரா கடன் திட்டங்கள் போன்றவை பாதிக்கும். தற்போது 10 ஆயிரம் கோடி கு டும்பங்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு திட்டம் உள்ளது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘நம்மிடம் குறிப்பிட்ட ஒரு அளவு பணம் தான் உள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்கு வரி விதிப்பு தான் அடித்தளம். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வரியை ரத்து செய்ய வேண்டும் என்றால் அதை நிதியமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும். மாற்று எரிசக்தி தான் இதற்கு ஒரே தீர்வு. மெத்தனால், எத்தனால், பயோ டீசல், பேட்டரி வாகனங்கள் போன்றவை தான் விலை குறைவானது.

சுற்றுசூழலுக்கும் உகந்தது. 70 சதவீத எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்வதற்கான கட்டணத்தை தான் குறைக்க வேண்டும். ரஷ்யாவில் செய்தது போல் சர்வதேச நாடுகளில் எண்ணெய் கிணறுகளை கையகப்படுத்த வேண்டும். 70 சதவீத இறக்குமதியின் தேவையை பூர்த்தி செய்ய நம்மிடம் போதுமான மூலதனம் இல்லை’’ என்றார்.