டில்லி

லக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ள எந்த ஒரு கொரோனா தடுப்பூசியையும் இறக்குமதி செய்யலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.   தற்போது இந்தியாவில் மூன்று கொரோனா தடுப்பூசிகளுக்கு மட்டுமே மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.   இதில் வெளிநாட்டுத் தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி  மட்டுமே உள்ளது.

தற்போது கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே மாநிலங்கள் தங்களின் தேவைக்கேற்ப தாங்களே கொரோனா தடுப்பூசியைக் கொள்முதல் செய்து கொள்ள மத்தியா அரசு அனுமதி அளித்துள்ளது.   இதையொட்டி தமிழகம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளன;.

இந்தியாவில் ஸ்புட்னிக் வி மருந்துக்கு மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளதால் அந்த மருந்தை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என தகவல்கள் வெளியாகின.

எனவே நிதி அயோக் உறுப்பினர் விகே பால், “உலக சுகாதார நிறுவனம் மற்றும் மருந்துக் கழகம் ஒப்புதல் அளித்த எந்த ஒரு தடுப்பூசியையும் இந்தியாவில் இறக்குமதி செய்யலாம். இதற்கான இறக்குமதி உரிமங்கள் ஒன்று முதல் இரு நாட்களில் வழங்கப்படும்.

இதுவரை இறக்குமதி உரிமத்துக்கான எந்த ஒரு விண்ணப்பமும் நிலுவையில் இல்லை.  அனைத்து விண்ணப்பங்களுக்கும் உடனடியாக  உரிமங்கள் வழங்கப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.