சென்னை,

கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டி வரும் ஆந்திராவுக்கு,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்.

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் கொசஸ்தலை ஆற்றில் ஆங்காங்கே தடுப்பணைகளை கட்ட ஆந்திர அரசு முயற்சித்து வருகிறது.

ஏற்கனவே பல இடங்களில் தடுப்பணையை கட்டி, தண்ணீரை தேக்கி வந்துள்ள ஆந்திரா தற்போது சிற்றாறுகளிலும் தடுப்பணையை கட்ட முயற்சித்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் பகுதியில் உள்ள  பெரிய ஏரிக்கு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புல்லூரில் பாயும் குசா என்ற ஆற்றில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது. தற்போது இந்த  இந்த ஏரிக்கு வரும் வரத்து கால்வாய் மீது நெலவாய் என்ற இடத்தில் 5 இடங்களில் ரூ.28 லட்சம் செலவில் ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டும் பணியை தொடங்கியது.

இதையறிந்த 3 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ராஜேஸ்வரி ரவீந்திரநாத் தலைமையில் 13-ந்தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு ஆந்திர மாநில போலீசார்  குவிக்கப்பட்டனர்.  தொடர்ந்து தமிழக, ஆந்திர அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில், தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் வெங்கடேசலு, திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்திரன், பள்ளிப்பட்டு தாசில்தார் வெங்கடேசன், விவசாயிகள் சார்பில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரவீந்திரநாத் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆந்திர மாநிலம் சார்பில் டிவிஷன் என்ஜினீயர் வெங்கட சிவா ரெட்டி, தாசில்தார் வெங்கட லட்சுமியம்மாள், இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது, ஆந்திரா தடுப்பணை கட்டுவதால் வெளியகரம் பகுதியில் குளங்கள், கிணறுகள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்படும் என்று தமிழக அதிகாரிகள் வாதிட்டனர்.

ஆனால், தமிழக அதிகாரிகள் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்த ஆந்திர அதிகாரிகள், எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என கூறினர்.

தொடர்ந்து வலியுறுத்திய தமிழக அதிகாரிகள், பாதிப்பு ஏற்படும் என்பதை தாங்கள் நிரூபிக்க கால அவகாசம் தேவை என தமிழக கூறினர்.

அதைத்தொடர்ந்து,  தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என நிரூபித்தால் தடுப்பணை கட்டுவதை நிறுத்தி விடுவதாக ஆந்திர மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் தங்களிடம் உள்ள ஆவணங்களை அவர்கள் தமிழக அதிகாரிகளுக்கு காட்டினர்.

இதைதொடர்ந்து ஒரு வாரத்திற்கு பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று இரு மாநில அதிகாரிகள் மட்டத்திலும் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, ஆந்திர மாநில அரசு  தடுப்பணை கட்டுவதை உடனே  நிறுத்த வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்.