தூக்கு தண்டனை விதிகளில் மாற்றம் – மத்திய அரசின் மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம்!

புதுடெல்லி: கைதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவது தொடர்பாக, சட்ட விதிமுறைகளில் மாற்றம் செய்வது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுள்ளது உச்சநீதிமன்றம்.

மத்திய அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது; துாக்கு தண்டனை தொடர்பான வழக்குகளில், தண்டனையை நிறைவேற்றும் விஷயத்தில் பின்பற்றுவதற்கென சில விதிமுறைகள் உள்ளன. ஆனால், இவையனைத்தும் குற்றவாளிகள் உரிமை தொடர்பானவையாகவே உள்ளன.

இதனால், குற்றவாளிகள் சட்டத்துடன் விளையாடி, தண்டனை நிறைவேற்றுவதை இழுத்தடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். சிலநேரங்களில், தண்டனைகளில் இருந்தும், அவர்கள் தப்பி விடுகின்றனர். எனவே, தண்டனையை நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். குற்றங்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சமூகத்தின் கருத்து அடிப்படையில் தண்டனை நிறைவேற்றுவதை முடிவுசெய்ய வேண்டும்.

துாக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான விதிமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “துாக்கு தண்டனை நிறைவேற்றுதல் தொடர்பாக 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது.

இதில் மாற்றம் செய்வதா? என்பது பற்றி பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்க வேண்டியுள்ளது. இறுதியில், அந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்தனர் நீதிபதிகள்.