புதுடெல்லி: இந்திய ராணுவத்தில், பெண்களுக்கு நிரந்தரப் பணிவாய்ப்பை வழங்க வேண்டுமென்ற தனது உத்தரவை செயல்படுத்தும் பொருட்டு, மத்திய அரசுக்கு மேலும் ஒரு மாத கால அவகாசத்தை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.
ராணுவத்தில், பெண் அதிகாரிகள் பணியிடங்களுக்கு, எஸ்எஸ்சி எனப்படும் குறுகிய கால நியமனங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. அதாவது 10 அல்லது 14 ஆண்டுகள் வரை மட்டுமே பெண்கள் பணியாற்ற முடியும். இதனால், பெண் அதிகாரிகளுக்கு, பதவி உயர்வு, படைகளுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு போன்றவை கிடையாது. மேலும், குறுகியகால நியமனம் என்பதால், ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளும் கிடையாது.
எனவே, இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது. ‘பெண்களுக்கும், ராணுவத்தில் நிரந்தர பணி வாய்ப்பை வழங்க வேண்டுமென, இந்தாண்டு பிப்ரவரி மாதம் அளித்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதை செயல்படுத்துவதற்கு அவகாசமும் அரசுக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கால், இந்தத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு மேலும் அவகாசம் அளிக்கும்படி, மத்திய அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு, மத்திய அரசுக்கு மேலும் ஒரு மாதகாலம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.