கொரோனா எதிரொலி – பார்வையாளர்களுக்கு தடைவிதித்த உச்சநீதிமன்றம்!

புதுடெல்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு உச்சநீதிமன்ற வளாகமும் தப்பவில்லை. தனது வளாகத்திற்கு தேவையில்லாமல் பார்வையாளர்கள் யாரும் வரவேண்டாமென கூறியுள்ளது உச்சநீதிமன்றம்.

வாரந்தோறும் சனிக்கிழமைகளில், உச்சநீதிமன்றத்தைப் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இப்போது உச்சநீதிமன்றம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது; இனிமேல் சனிக்கிழமைகளில் வளாகத்திற்குள் வருவதற்கு அனுமதி கிடையாது. அடுத்த உத்தரவு வெளியாகும் வரை, இந்தத் தடை நீடிக்கும்.

அருங்காட்சியகமும் அடுத்த உத்தரவு வெளியாகும் வரை செயல்படாது. நீதிமன்ற வழக்கறிஞர்கள், ஊழியர்கள் என அனைவரும், தினமும் மாலை 5:30 மணிக்கு வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும்.

மாலை 6 மணிக்கு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுவதால், அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நீதிமன்ற வாயில்களில் கூட்டம் கூடக்கூடாது. பணிகள் முடிந்தவுடனேயே அனைவரும் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.