டெல்லி: மருத்துவ படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தால் மத்தியத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இந்த கோரிக்கையை முன்வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் மனுக்களை தாக்கல் செய்தன.

மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு எத்தனை சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது குறித்து 3 மாதங்களில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அடுத்த கல்வியாண்டில் இதனை அமல்படுத்த வேண்டும் என்றும் ஆணையிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், ஓபிசி மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று கோரியது.

இந்நிலையில் இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு மீது மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டு என்றும் உத்தரவிட்டுள்ளது.