சர்வதேச சட்டக்கல்வி நிறுவனம் அமைய உதவுங்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி கோரிக்கை

சென்னை: சர்வதேச தரம்வாய்ந்த சட்டக் கல்வி நிறுவனத்தை அமைப்பதற்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பார் கவுன்சிலுக்கு, நிதியுதவி அளித்து மாநில அரசு துணைபுரிய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி.

சென்னையில் அவர் கூறியதாவது, “தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த சட்டக் கல்வி நிறுவனம் அமைக்கப்பட வேண்டும். அதற்கு மாநில அரசு நிதியாதாரம் உட்பட தேவையான விஷயங்களில் உதவிபுரிய வேண்டும்.

இந்த விஷயத்தில், மாநில அரசிடமிருந்து முறையான உதவிகளை தவறாமல் பெற்றிடும் வகையில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார் நீதிபதி பானுமதி.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு புதிதாக தேர்வுசெய்யப்பட்ட 25 உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு பேசியபோது, இந்த வேண்டுகோளை விடுத்தார் நீதிபதி. மேலும், தவறுசெய்யும் வழக்கறிஞர்களுக்கு தண்டனைகள் வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்தில் நீதிபதி பானுமதி மாறுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.