புதுடெல்லி: இந்திய ராணுவத்தில், தரைப்படையைப் போலவே, கப்பற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டுமென்ற உத்தரவை பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.

தரைப்படை மற்றும் விமானப்படைகளைப் போன்று, கப்பற்படைகளில் பெண்களுக்கென்று நிரந்தர கட்டளைப் பணி வழங்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டி, கடந்த 2015ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் சில பெண் கடற்படை அதிகாரிகள்.

அதில் ராணுவம், விமான படையில் பெண்களுக்கு நிரந்தர கட்டளை பணிகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் எங்களுக்கு அது போன்ற ஒன்று இல்லாததால் நாங்கள் முன் கூட்டியே பதவி ஓய்வு பெற நேரிடுகிறது. இல்லாவிட்டால் கட்டாயமாக எங்களுடைய பணிக்காலம் முடித்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் நாங்கள் உயர் பதவிகளையும் வருமானத்தையும் இழக்கிறோம் என்பன போன்ற பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பெண் அதிகாரிகளுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. ஆனால், இத்தீர்ப்பை ஏற்காத மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் அஜய் ரஸ்டோகி அடங்கிய அமர்வு விசாரித்தது.

“நிரந்தரப் பணிகளில் ஆண்-பெண் பேதம் பாராட்டுவதை ஏற்க முடியாது. ஆண் அதிகாரிகளைப் போன்று, பெண்களாலும் சிறப்பாக செயலாற்ற முடியும். எனவே, கடற்படையில் காலிப் பணியிடங்களின் அடிப்படையில், அடுத்த 3 மாதங்களுக்குள் பெண்களுக்கும் சமஉரிமை வழங்க வ‍ேண்டும்” என்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.