கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தில், கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பில்கிஸ் பனோ என்ற முஸ்லீம் பெண்மணிக்கு, ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க, குஜராத் அரசிற்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

மேலும், அவருக்கு அரசு வேலை வழங்கவும், அரசின் சார்பில் குடியிருப்பு வழங்கப்படவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

குஜராத் மதக் கலவரத்தின்போது, 2002ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி ரந்திக்பூர் கிராமத்தில், கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானார் கர்ப்பவதியான பில்கிஸ் பனோ. அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரும் கொல்லப்பட்டனர்.

கடந்த 2017ம் ஆண்டு, இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்ட 12 பேரின் ஆயுள் தண்டனையை உறுதிசெய்த மும்பை உயர்நீதிமன்றம், அந்த வழக்கிலிருந்து கீழமை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையையும் நிறத்தி வைத்தது.

எனவே, இந்த வழக்கில், மும்பை உயர்நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை பூர்த்தி செய்யுமாறு குஜராத் அரசை வலியுறுத்தியது உச்சநீதிமன்றம்.

முன்னதாக, தனக்கு குஜராத் அரசு சார்பாக வழங்கப்பட்ட ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகையை ஏற்க மறுத்து, தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வந்தவர் பில்கிஸ் பனோ என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி

கார்ட்டூன் கேலரி