கர்நாடகா தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கு: நவ. 13ல் தீர்ப்பை அறிவிக்கிறது உச்ச நீதிமன்றம்

டெல்லி: கர்நாடகா தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் வரும் 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்து இருக்கிறது.

கர்நாடகாவில், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அமைத்து அரியணை ஏறின. காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளத்தை சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் குமாரசாமி ஆட்சியின் மீது அதிருப்தி தெரிவித்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதனையடுத்து,  கொறடா உத்தரவை மீறியதாக சபாநாயகர் அவர்களை தகுதிநீக்கம் செய்தார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரி அந்த வழக்கில், விசாரணை நடைபெற்று முடிந்திருக்கிறது. வரும் 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்து இருக்கிறது.

முன்னதாக விசாரணை முடிந்த போது, கடந்த மாதம் இறுதியில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீர்ப்பு அறிவிக்கப் படவில்லை.