புதுடெல்லி: தகவல்தொழில்நுட்ப சட்டத்தின் 66-A பிரிவை, தனிமனிதரின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்றுகூறி, உச்சநீதிமன்றம் ரத்துசெய்துள்ளது.

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவிடுவோரை, காவல்துறை கைது செய்ய வகைசெய்யும் 66-A சட்டப்பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட ஒரு பொதுநல வழக்கில், இத்தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

இதுதொடர்பாக நீதிமன்ற தீர்ப்பில் கூறப்படுவதாவது, “இந்தச் சட்டப்பிரிவு, ஒரு மனிதரின் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை சுதந்திரத்தை தடைசெய்வதாக உள்ளது. அந்தவகையில், இது சட்டவிரோதம்.

சிந்தனை சுதந்திரம் என்பது முக்கியமான ஒன்று. பொதுமக்களின் அறியும் உரிமை என்பது, இந்த சட்டப்பிரிவால் நேரடியாக பாதிக்கப்படுகிறது. எனவே, இப்பிரிவு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

நமது அரசியலமைப்பு சட்டம், சிந்தனை சுதந்திரம் மற்றும் நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் உரிமை ஆகியவற்றை அளித்துள்ளது. ஒரு கருத்தை தெரிவிப்பதால், சட்டம் ஒழுங்கு கெடுகிறது என்று சொல்வதற்கில்லை. ஒரு மனிதருக்கு அவதூறாக தெரியும் ஒரு விஷயம், இன்னொரு மனிதருக்கு சரியாக தெரியும்” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் இதர பிரிவுகளை ரத்துசெய்ய மறுத்துவிட்டது உச்சநீதிமன்றம். அந்தப் பிரிவுகள், வலைதளங்களை தடைசெய்வது தொடர்பானவை.

– மதுரை மாயாண்டி