புதுடெல்லி: ஜப்பானிய மருந்து நிறுவனமான டெய்ச்சி சன்க்யோவிற்கு, நீதிமன்ற தீர்ப்பின்படி சேரவேண்டிய தொகை குறித்து, ரான்பாக்ஸி நிறுவன முன்னாள் உரிமையாளர்களான சிங் சகோதரர்களின் பதில், திருப்தி தருவதாக இல்லையென அதிருப்தி தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை செல்ல வேண்டுமென எச்சரித்துள்ளது.

அந்த சகோதரர்களின் மீது தொடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும் என்றும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், மல்விந்தர் சிங் மற்றும் ஷிவிந்தர் சிங் ஆகிய இருவரும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

“நீங்கள் இருவரும் இந்த உலகத்தில் பாதியை சொந்தமாக வைத்திருக்கலாம். ஆனால், கொடுக்க வேண்டிய தொகை ரூ.3500 கோடியை எப்படி திரட்டுவீர்கள் என்பதற்கான சரியான விளக்கங்கள் உங்கள் தரப்பிடம் இல்லை.

உங்களுக்கு ரூ.6000 கோடி வரவேண்டியிருப்பதாக கூறுகிறீர்கள். ஆனால், அதன் நதிமூலம் மற்றும் ரிஷிமூலம் குறித்து தெரியவில்லை” என்று கண்டித்துள்ளது உச்சநீதிமன்றம்.

சிங் சகோதரர்கள் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, ஏப்ரல் 11ம் தேதி நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி