ஜெயலலிதா மேல்சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்ல அப்பல்லோ தடை: ஓபிஎஸ் பகீர் தகவல்

தேனி:

ப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக  வெளிநாடு அழைத்துச் செல்ல அப்பல்லோ நிர்வாகம் மறுத்து விட்டதாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடுக்கிடும் தகவலை தெரிவித்து உள்ளார்.

இது பொதுமக்களிடையே  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை போர்க்குற்றத்திற்கு உடந்தையாக இருந்த திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிரான அதிமுக பொதுக்கூட்டம் நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது,  தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது இலங்கையில் மிகப்பெரிய போர் நடக்கும் சூழல் உருவாdது.  அப்போது இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்குமாறு ஜெயலலிதா பல முறை வலியுறுத்தினார். ஆனால் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இலங்கையில் போர் மும்முரமாகியது… அதை மறைககவே  மனித சங்கிலி, அரைமணி நேர உண்ணாவிரத போராட்டம் போன்றவைகளை நடத்தி  இலங்கையில் போர் நிறுத்தம் வந்து விட்டதாக கருணாநிதி கூறினார்.

இதனை நம்பி பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்த அப்பாவி மக்கள் இலங்கை ராணுவத்தின் குண்டு மழைக்கு பலியாகினர். 1 லட்சத்து 60 ஆயிரம் பேரை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. இதில் குழந்தைகள் மட்டும் 40 ஆயிரம் பேர் இறந்தனர். போர்களத்தில் இருந்த பிரபாகரனை வைகோ சந்தித்த போது அவரிடம் கருணாநிதியிடம் கொடுக்குமாறு ஒரு கடிதத்தை அளித்துள்ளார். ஆனால் இதனை வைகோ எடுத்து கூறியும் கருணாநிதி கண்டுகொள்ளவே இல்லை.

இலங்கையில் நடந்த இந்த இனப்படுகொலைக்கு தி.மு.க.வும் காங்கிரசும்தான் என்றார்.  இலங்கை தமிழர்களுக்கு இத்தனை பெரிய துரோகத்தைச் செய்த தி.மு.க. மற்றும் காங்கிரஸ் ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது. எப்போதும் மக்கள் மன்றத்தை சந்திக்கவும் முடியாது. இனப்படுகொலையில் ஆயுதங்கள் கொடுத்து உதவிய தி.மு.க. – காங்கிரசை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ஓபிஎஸ்,  அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க  வேண்டும் என்று அங்கிருந்த அப்பல்லோ மருத்துவர்களிடம் வலியுறுத்தினோம்.  ஜெயலலிதாவுக்கு ஏதேனும் நிகழ்ந்து விட்டால் மக்கள் எங்களை ரோட்டில் நடமாட விடமாட்டார்கள். எனவே நாங்கள் ஜெயலலிதாவை அமெ ரிக்கா கொண்டு செல்கிறோம் என்று அப்பல்லோ நிர்வாகத்திடம் கெஞ்சினோம். அதற்கு அங்கிருந்த டாக்டர்கள் எங்கள் மீது நம்பிக்கை இல்லையா? என்று கூறி வெளிநாடு கொண்டு செல்வதை தடுத்து விட்டனர் என்ற பகீர் தகவல்களை தெரிவித்தார்.

சமீப காலமாக ஜெ. மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ நிர்வாகம் பல முரண்பட்ட தகவல்களை கூறி வரும் நிலையில், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஆக்டிக் முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது இந்த திடுக்கிடும் தகவலை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதுவரை ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவையும், டி.டி.வி. தினகரனையும் குற்றம்சாட்டி வந்த ஓ.பன்னீர் செலவம் முதல் முறையாக அப்பல்லோ நிர்வாகம் மீது குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடையேயும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெ.வை சசிகலா மட்டுமே கவனித்து வந்த நிலையில்… பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய நிலையில் தற்போது  ஜெ. மர்ம மரணத்துக்கு அப்பல்லோ மருத்துவமனையும் துணை போயிருப்பது  ஓபிஎஸ்-சின் தகவல் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.