ரவுண்ட்ஸ்பாய்:aa
தொடர்பே இல்லாத ஒருவரின் செல்போன் எண்ணை, பிரச்சினைக்குரிய தனது பதிவில் வெளியிட்டு, கொலை மிரட்டலுக்கு ஆளாக்கிய பேஸ்புக் தமிழச்சி, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.
பேஸ்புக்கில், தமிழச்சி என்ற பெயரில் பரபரப்பான பதிவுகளை எழுதி வருபவர்…. பிரான்சில் வசிக்கிறார்.  தனது  இயற்பெயர் யுமா என்றும்,  பாண்டிச்சேரியை பூர்விமாகக் கொண்டவர் என்றும் தெரிவித்திருக்கிறார். தனது தந்தை பிரான்ஸ் ராணுவத்தில் பணியாற்றியவர் என்றும்,  தான்  ‘ஏற்றுமதி இறக்குமதி’ கம்பெனி மற்றும் ‘க்ரைணெட்’ இறக்குமதி கம்பெனியும் நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழச்சி - தியாகு
தமிழச்சி – தியாகு

இவர் தனது முகநூல் பதிவுகளில், சென்னை சுவாதி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், அப்பாவி என்றும், பா.ஜ.க.. பிரமுகர் கருப்பு முருகானந்தம்தான் உண்மையான கொலைக் குற்றவாளி என்றும் தொடர்ந்து பரபரப்பாக எழுதி வருகிறார்.
இவரைப்போலவே, திலீபன் மகேந்திரன் என்பவரும் கருப்பு முருகானந்தத்தை குற்றம்சாட்டி எழுதி வருகிறார். இதையடுத்து இருவர் மீதும் கருப்பு முருகானந்தம்  காவல்துறையில் புகார் அளித்தார். திலீபன் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார். அவர் மீது நேற்று முன்தினம் கொலைவெறித்தாக்குதல் நடந்தது. அவருடன் அவரது வழக்கறிஞர் தர்மபாலாவும் தாக்கப்பட்டார். “சுவாதி கொலை வழக்கில், கருப்பு முருகானந்தத்தை தொடர்பு படுத்தி எழுதக்கூடாது” என்று கூறி தாக்கியதாக வழக்கறிஞர் தர்மபாலா தெரிவித்தார்.
இந்த நிலையில், தாக்கப்பட்ட திலீபனுக்கு உதவக்கோரி தமிழச்சி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். அதில், திலீபன் குறித்த மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ள குறிப்பிட்ட செல்போன் எண்ணையும் குறிப்பிட்டிருந்தார்.
திாயகுவின் எண்ணோடு தமிழச்சி பதிவு
திாயகுவின் எண்ணோடு தமிழச்சி பதிவு

ஆனால் அந்த எண், தியாகு என்ற பெரியாரிஸ்டுக்கு உரியது. அவர், “எனக்கு தமிழச்சியையோ, திலீபனையோ தெரியாது. அவர்களிடம் செல்போனில்கூட பேசியதில்லை. நான் ஒரு பெரியாரிஸ்ட் என்பதால், பெரியார் குறித்த பதிவுகளை பகிர்வேன். அதில் தமிழச்சி மற்றும் திலீபன் பதிவுகளும் உண்டு. அவ்வளவுதான். இந்த நிலையில் எனது எண்ணை சம்பந்தமே இல்லாமல்  தனது பதிவில் குறிப்பிட்டார் தமிழச்சி.
இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட போன்கால்கள் எனக்கு வந்தன. பலர், திலீபன் குறித்து விசாரித்தார்கள். நான் இருப்பது கர்நாடகா, எனக்கும் திலீபனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை அவர்களிடம் சொன்னேன்.
அதே நேரம், வேறு சிலர் என்னை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினார்கள். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளேனேன்” என்று  நமது patrikai.com  இதழிடம் தெரிவித்திருந்தார் தியாகு.
அந்த செய்தி:

“பேஸ்புக்” தமிழச்சியால் கொலை மிரட்டலுக்கு ஆளாகும் கர்நாடக தமிழர்


நமது செய்தியை தமிழச்சியின் மெயில் முகவரிக்கு அனுப்பி அவரது கருத்தையும் கேட்டிருந்தோம். அவரிடமிருந்து இதுவரை பதில் வரவில்லை. ஆனால் நமது செய்தியை படித்த பிறகு, குறிப்பிட்ட பதிவில் இருந்து தியாகுவின் செல்போன் எண்ணை தமிழச்சி நீக்கியிருக்கிறார்.
இந்த நிலையில் நம்மை மீண்டும் தொடர்புகொண்ட தியாகு, “தமிழச்சி என்பவர் பெரியாரிஸ்ட் என்று நினைத்திருந்தேன். அவரது சில பதிவுகளை அதனாலேயே என் பக்கத்தில் பகிர்ந்தேன். ஆனால் எனக்கு தொடர்பே இல்லாத விவகாரத்தில் எனது செல் போன் எண்ணை பதிவிட்டு, எனக்கு கொலை மிரட்டல்கள் வரும் அளவுக்கு செய்துவிட்டார். இதனால் கடும் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன்.
ஆனால் இதுகுறித்து எந்தவித வருத்தமும் தெரிவிக்காமல், என் எண்களை மட்டும் நீக்கியிருக்கிறார் தமிழச்சி.
மனித உரிமை, சுயமரியாதை என்றெல்லாம் பதிவிடும் தமிழச்சி, பிறரது உரிமையை, சுமயரியாதையை மதிப்பவராக இருந்தால் பகிரங்கமாக தனது செயலுக்கு மன்னிப்பு கோர வேண்டும்” என்று நம்மிடம் தெரிவித்தார் தியாகு.

நமது செய்திக்குப் பிறகு எண்களை நீக்கிய தமிழச்சியின் பதிவு
நமது செய்திக்குப் பிறகு எண்களை நீக்கிய தமிழச்சியின் பதிவு

 
தமிழச்சி மன்னிப்பு கேட்பாரா?