ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் அசிமானந்த் விடுதலையை எதிர்த்து அப்பீல் செய்தால் மோடி உண்மையிலேயே காவலாளிதான்: அசாத்தீன் ஓவாய்ஸி

புதுடெல்லி:

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு சம்பத்தில் அசிமானந்த் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அப்பீல் செய்தால், பிரதமர் மோடி உண்மையிலேயே காவல்காரர் தான் என ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாத்தின் ஓவாய்ஸி கூறியுள்ளார்.


சம்ஜவுதா ரயிலில் வெடிகுண்டு வெடித்து 68 பேர் கொல்லப்பட்ட வழக்கில், அசிமானந்த உள்ளிட்ட 4 பேரை ஹரியானா சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அசாத்தின் ஓவாய்ஸி, “தன்னை காவலாளி என சொல்லிக் கொண்டு பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். அவர் என்ன வகையான காவலாளி.

பாகிஸ்தானியர்களோடு சேர்த்து 25 இந்தியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்புச் சம்பவம் தீவிரவாத குற்றம். இப்படி இருக்கும்போது, நீங்கள் எப்படி காவலாளியாக இருக்க முடியும்?

உண்மையிலேயே காவலாளியாக இருந்தால், அசிமானந்த் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அப்பீல் செய்து உண்மையிலேயே காவலாளி என்று நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.