தினகரன் போட்டியிட தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

டில்லி:

ர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த பி.ஏ.ஜோசப் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன், 1994-95-ம் ஆண்டுகளில் அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டம், 1972-ன் பிரிவுகள் 8, 9, மற்றும் 14 ஆகியவற்றை மீறும் வகையில் ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி அந்நிய  செலாவணியை பெற்று இருக்கிறார்.

டி.டி.வி. தினகரன்

வெளிநாட்டு வங்கிகளின் கணக்குகள் மூலம் அந்நிய  செலாவணியை வழங்க அங்கீகாரம் பெறாதவர்களிடம் இருந்து பெரும் தொகையை டிடிவி தினகரன் பெற்று இருக்கிறார்.

சம்பந்தப்பட்ட நீதிமன்றம் இவர் மீதான குற்றத்தை நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்து 31 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இதுதொடர்பான வழக்கும் கீழ் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தவறானது என கருதுகிறோம்

ஏனென்றால், இது பொதுவாழ்க்கையில் பொருளாதார ரீதியான விதிமுறைகள் மற்றும் பொதுவாழ்வில் நேர்மையை கடைபிடித்தல் போன்ற கொள்கைகளுக்கு எதிரானதாகும். இதுபோன்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்றால் மட்டுமே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியும் என்று கூறுவது அந்நிய செலாவணி சட்டத்தின் நோக்கத்தை தோல்வி அடையச் செய்துவிடும்.

அந்நிய செலாவணி விதிமீறல்களுக்காக நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருப்பதும் கிரிமினல் வழக்கில் ஒருவர் தண்டிக்கப்படுவதும் சமமாக நடத்தப்பட வேண்டும்.

இந்த விஷயத்தை கருத்தில் கொண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளர் டிடிவி.தினகரன் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். அதே போல, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும்”  என்று அந்த  மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை பி.ஏ. ஜோசப் சார்பில் வழக்கறிஞர் சிவபாலமுருகன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published.