சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாறும் ஆப்பிள் நிறுவனத்தின் 9 உற்பத்தி நிலையங்கள்

டில்லி

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் 9 உற்பத்தி நிலையங்கள் மாற்ற உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

சீனாவில் பல சர்வதேச நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி நிலையங்களை அமைத்துள்ளன.   ஆனால் கொரோனா பரவலுக்குப் பிறகு இந்த சர்வதேச நிறுவனங்கள் சீனாவில் இருந்து தங்கள் உற்பத்தி நிலையங்களை வேறு நாடுகளுக்கு சிறிது சிறிதாக மாற்றி வருகின்றன.   எனவே பல நாடுகளும் அவற்றை தம் பக்கம் இழுக்கத் திட்டங்களை அறிவித்து வருகின்றன.

அவ்வகையில் இந்திய அரசு மின்னணு துறைக்கு உற்பத்தி அடிப்படை ஊக்கத்தொகை சலுகைத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை அளித்துள்ளது.  இந்த திட்டங்களால் ஈர்க்கப்பட்டு சாம்சங், ஃபாக்ஸ்கான், ரைசிங் ஸ்டார், விஸ்டிரான் மற்றும் பெகட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி நிலையங்களை வெகுவாக மாற்றி உள்ளன.

மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பெங்களூருவில் நடந்த 23 ஆம் தொழில் நுட்ப மாநாட்டில் காணொலி மூலம் கலந்துக் கொண்டுள்ளார்.  அப்போது அவர், “கொரோனா பரவலுக்கு பிறகு பல சர்வதேச நிறுவனங்களின் உற்பத்தித் துறை வேறு நாடுகளைத் தேர்வு செய்ய உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவுக்குப் பல பெரிய திட்டங்களுடன் வர உள்ளது.  அதில் முதல் கட்டமாகச் சீனாவில் இருந்து 9 உற்பத்தி நிலையங்களை இந்தியாவுக்கு ஆப்பிள் நிறுவனம் மாற்ற உள்ளது.    இதுபோல் மேலும் பல சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.