சீனா : மீண்டும் தொடங்கப்படும் ஆப்பிள் நிறுவன விற்பனை நிலையங்கள்

பீஜிங்

சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த ஆப்பிள் நிறுவன விற்பனை நிலையங்களில் பாதிக்கு மேல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

உலகப் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் ஐஃபோன் மற்றும் கணினிகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.   உலகின் பல நாடுகளிலும் இந்நிறுவனம் தனத் சொந்த விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறது.  அவ்வகையில் சீனாவில் 42 விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறது.  இந்த விற்பனை நிலையங்கள் 12 மணி நேரம் இயங்கி வந்தன.

கடந்த டிசம்பர் முதல் சீனாவில் ஆட்கொல்லியான கொரோனா வைரஸ் தாக்குதல் நாட்டையே அச்சுறுத்தி வருகிறது.    அதையொட்டி  பல விற்பனை நிலையங்களும் அங்கு மூடப்பட்டன. அவ்வகையில் ஆப்பிள் நிறுவனம் தனது விற்பனை நிலையங்கள் அனைத்தையும் மூடி விட்டது.   இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் சீன விற்பனை முழுவதுமாக நின்று போனது.

இந்நிறுவனம் சீனாவில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 63 பில்லியன் டாலர் விற்பனையை இலக்காக கொண்டிருந்தது.  ஆனால் தற்போது அதை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   இது குறித்து ஆலோசித்த ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சீன விற்பனை நிலையங்களை மீண்டும் தொடங்க முடிவு செய்தார்.

 

அதன் அடிப்படையில் ஆப்பிள் நிறுவனம் சீனாவில் உள்ள தனது 42 விற்பனை நிலையங்களில் 29 நிலையங்களை மீண்டும் தொடங்கி உள்ளது.  அத்துடன் இந்த விற்பனை நிலையங்களின் வேலை நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.    விரைவில் மற்ற விற்பனை நிலையங்களும் திறக்கப்படும் எனவும் இந்த வார இறுதிக்குள் 12 மணி நேர விற்பனை தொடங்கும் எனவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.