அடுத்த வருடம் இந்தியாவில் விற்பனை நிலையத்தைத் தொடங்கும் ஆப்பிள் நிறுவனம்

கூபெர்டினோ, கலிஃபோர்னியா

அடுத்த வருடம் இந்தியாவில் ஆப்பிள் நிறுவன விற்பனை நிலையத்தைத் தொடங்க உள்ளதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு நேரடி வெளிநாட்டு முதலீடுகளை எளிதாக்கும் நடவடிக்கைகளைக் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.  அப்போது இருந்து ஆப்பிள் நிறுவனம் தனது நேரடி விற்பனை நிலையத்தை இந்தியாவில் தொடங்க முயற்சிகள் செய்து வருகிறது.   ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஐ போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

கலிஃபோர்னியாவில் உள்ள கூபெர்டினோவில் நடந்த ஆப்பிள் நிறுவன பங்குதாரர் கூட்டத்தில் இது குறித்து அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.  ஒரு பங்குதாரரின் கேள்விக்குப் பதில் அளிக்கையில் அவர், “ஆப்பிள் நிறுவனப் பொருட்களை இந்த 2020 ஆம் வருடம் ஆன்லைன் மூலம் இந்தியாவில் விற்பனை செய்ய உள்ளோம்.

அடுத்த வருடம் இந்தியாவில் நேரடி விற்பனை நிலையங்களைத் தொடங்க உள்ளோம்.  இதற்கான அனுமதியை அரசிடம் இருந்து பெற நாம் அங்கு செல்ல வேண்டி உள்ளது.   நமது பொருட்களை மற்றொருவர் விற்பதை நான் விரும்பவில்லை.

இந்த வருடம் நாம் இந்தியாவில் விற்பனை நிலையங்களைத் தொடங்க முதலில் எண்ணி இருந்தோம்.    ஆனால் தற்போது போக்குவரத்து விவகாரம் குறித்து முடிவு செய்யாததால் ஆன்லைன் விற்பனையை மட்டும் தொடங்குகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.