தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் பணி – மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்..!

சென்னை: தமிழக மின்சார வாரியத்தில் 600 உதவிப் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி மார்ச் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எலெக்ட்ரிகல் பிரிவில் 400, மெக்கானிக்கல் பிரிவில் 125, சிவில் பிரிவில் 75 என மொத்தம் 600 பொறியாளர்களை பணிக்கு தேர்வுசெய்ய உள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம்.

இதற்காக, இணையதளம் வாயிலாக தேர்வு நடத்தி, அதில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்படவுள்ளது. இத்தகைய நடைமுறை பின்பற்றப்படுவது இதுவே முதன்முறை.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை ஜனவரி 24ம் தேதி துவங்கியது. விண்ணப்பிக்கும் கடைசித்தேதி பிப்ரவரி 24 என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அதற்கான தேதியை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 16ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வுக் கட்டணத்தை மார்ச் 19ம் தேதி வரை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விபரங்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று காணலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.