பரோடா: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரில், கேப்டன் விராத் கோலி, பாதியிலேயே நாடு திரும்பும் நிலையில், அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, அந்த முடிவு தவறு என்று கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் இர்பான் பதான்.

இந்திய அணி, ஐபிஎல் முடிந்ததும், ஆஸ்திரேலியாவில் நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்திய டெஸ்ட் அணியில் ரோகித் ஷர்மாவுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல் டெஸ்ட் முடிந்ததும், சொந்த காரணங்களுக்காக, விராத் கோலி நாடு திரும்புவார் என்றும், எனவே, அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக செயல்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள இர்பான் பதான், “அனைத்தையும்விட குடும்பம் முக்கியம், எனவே, கோலியின் முடிவுக்கு மதிப்புத்தர வேண்டும். அதேசமயம், கோலிக்கு பதிலாக ரஹானேவை நியமிக்காமல், ரோகித் ஷர்மாவை நியமிக்க வேண்டும்.

அதுதான் சரியான முடிவாக இருக்கும். ஏனெனில், பல சர்வதேச போட்டிகளில் கேப்டன் பொறுப்பேற்று வெற்றிகளை தேடிக் கொடுத்துள்ளார். எனவே, கேப்டன் பொறுப்புக்கு அவரே பொருத்தமான நபர்” என்றுள்ளார் இர்பான் பதான்.