வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க சிறப்புக்குழு நியமனம்

சென்னை:
சென்னையில் வீடுகளிலேயே தனிமை படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்காக வார்டு வாரியாக 15 ஆயிரம் மாத ஊதியத்தில் தன்னார்வலர்கள் நியமித்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மடிப்பாக்கம் மண்டல அலுவலகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் உதவிப் பொறியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் அடங்கிய Micro Plan குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் இளவயதில் உள்ளோரை அவர்களின் விருப்பத்தின் பேரிலேயே கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்துவதாகக் குறிப்பிட்ட ஆணையர் பிரகாஷ், அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றினால் மட்டுமே கொரோனாவை விரட்ட முடியும் என அறிவுறுத்தினார்.