தேர்தல்களில் ஒரு கூட்டணி வெற்றிபெற்றுவிட்டால் அதைப் பொருந்தியக் கூட்டணி என்றும், வெற்றிபெறாவிட்டால், அதைப் பொருந்தாக் கூட்டணி என்றும் குறிப்பிடுவது, அரசியல் விவாத அரங்குகளில் வழக்கமாக நடைபெறும் ஒன்றாக உள்ளது.

அதாவது, கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் மனமுவந்து இணைந்து பணிசெய்து, கொள்கைகள் ஒத்துப்போய், அக்கூட்டணியை மக்களும் ஏற்றுக்கொண்டால் அது பொருந்தியக் கூட்டணி என்றும், கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் மனம் ஒப்பி இணைந்து பணிசெய்யாமல், ஒருவருக்கொருவர் உள்குத்து வேலை பார்த்து, அக்கூட்டணியை மக்களும் ஏற்றுக்கொள்ளாமல் போனால், அது பொருந்தாக் கூட்டணி என்றும் வரையறை செய்கிறார்கள்.

அதாவது, இந்த அரசியல் விமர்சகர்கள் கூறுவது என்னவெனில், எதிரெதிரே களமாடி ஒருவரையொருவர் கடுமையாக (கொள்கைரீதியாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ) விமர்சித்துக் கொள்ளும் கட்சிகள், திடீரென கூட்டணியில் சேரும்போது, தலைமைகள் இணைந்தாலும், தொண்டர்களால் இணைய முடியாதாம். அப்படியானால், இவர்களின் வாதப்படி பார்த்தால், ஒத்தக் கொள்கைகளைக் கொண்ட, ஒருவரையொருவர் விமர்சித்துக் கொள்ளாத, நீண்டகாலம் நட்புணர்வுடன் இருக்கும் கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இணைந்து வெற்றிபெற முடியும் என்ற கருத்தையே நாம் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

தமிழகத்தில் நடந்த சில தேர்தல்களில் அமைக்கப்பட்ட பொருந்தாக் கூட்டணிகளாய், மேற்கண்ட அரசியல் விமர்சகர்கள் தரும் உதாரணங்களை நீங்களே பாருங்கள்.

* 1971ம் ஆண்டு தேர்தல்களில், காங்கிரசில் இருந்தபோது எதிரெதிர் துருவங்களாக இருந்த இராஜகோபால ஆச்சாரியாரும், காமராஜரும் இணைந்தது.

* 2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், பாரதீய ஜனதாவை, திமுக தன்னுடன் வைத்துக்கொண்டது.

* 2011ம் ஆண்டில், திமுக கூட்டணியில் பாமக இணைந்தது மட்டுமின்றி, பாமக இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளும் சேர்ந்தது.

சரி, மேற்கண்ட 3 கூட்டணிளும் பொருந்தாக் கூட்டணி என்றால், தேர்தல்களில் வெற்றியடைந்த வேறுசில கூட்டணிகளின் உதாரணங்கள்;

* 1967ம் ஆண்டு ஆச்சாரியாரின் சுதந்திரா கட்சியுடன் திமுக அமைத்தக் கூட்டணி

* 1971 நாடாளுமன்ற தேர்தலில் திமுக -வுடன் இந்திரா காந்தி அமைத்தக் கூட்டணி

* 1980ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்திரா காந்தியுடன், கருணாநிதி அமைத்தக் கூட்டணி

* 1999ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுடன், திமுக அமைத்தக் கூட்டணி

* 2001 சட்டமன்ற தேர்தலில், ஜெயலலிதாவோடு, மூப்பனார் அமைத்தக் கூட்டணி

* 2009 நாடாளுமன்ற தேர்தலில், திருமாவளவன் காங்கிரசோடு அமைத்தக் கூட்டணி

* 2011ம் ஆண்டு ஜெயலலிதாவோடு, விஜயகாந்த் அமைத்தக் கூட்டணி

மேற்கண்ட பொருந்தாக் கூட்டணிகள் எப்படி வெற்றி பெற்றன?

ஒரு கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்கும் தோல்விக்கும், அந்தந்த நேரத்தினுடைய அரசியல் நிலைமைகள், ஒரு பொது எதிரியை வீழ்த்த வேறுபல அரசியல் எதிரிகள் தற்காலிகமாக இணைந்து கொள்வது, மக்களிடம் எழுந்திருக்கும் அதிருப்திகள், ஜாதிய பின்புல வாக்குகள், பண விநியோகம், வலுவான பிரச்சார வியூகம், ஏதேனும் ஒரு விஷயத்தைப் பிடித்துக்கொண்டு ஊதிப் பெருக்குதல் (உதாரணம்: 2ஜி), இவை எல்லாவற்றுக்கும் மேலாக மீடியாக்களால் கிளப்பி விடப்படும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு சூழல்கள், தேர்தல் கமிஷனின் சர்சைக்குரிய செயல்பாடுகள் உள்ளிட்ட ஏராளமான காரணங்களே, ஒரு கூட்டணியின் வெற்றி – தோல்வியை நிர்ணயிக்கின்றன என்பதை மேற்குறிப்பிட்ட உதாரணங்களை ஆராய்ந்தாலே புரிந்து கொள்ளலாம்.

எனவே, பொருந்திய மற்றும் பொருந்தாக் கூட்டணி என்பதற்கு சிலபல அரசியல் விமர்சகர்கள் கூறும் நியாயங்கள், தர்க்கப்படி ஒத்துவரவில்லை என்ற முடிவிற்கே வரமுடிகிறது.

இப்போதுகூட, அதிமுக – பாஜக அமைத்திருக்கும் கூட்டணியை, பொருந்தாக் கூட்டணி என்றே பலரும் அழைக்கிறார்கள். ஆனால், அக்கூட்டணி தோல்வியுற்றால், அதற்கு, பொருந்தாக் கூட்டணி என்ற குற்றச்சாட்டு காரணமாக இருக்காது என்பதை நாமெல்லாம் தெளிவாகவே அறிவோம்.

– மதுரை மாயாண்டி