துபாய் : பயணிகள் மருந்து மாத்திரைகள் எடுத்து வர புதிய கட்டுப்பாடு

துபாய்

மீரகத்துக்கு வரும் பயணிகள் மற்றும் அங்கு வசிப்போர் தங்களுக்கான மருந்து மற்றும் மாத்திரைகள் எடுத்து வர அரசு அனுமதி தேவை என அமீரக அரசு அறிவித்துள்ளது.

அரபு நாடுகளில் போதை மருந்து கடத்தல் அதிகமாக உள்ளது. அதை ஒட்டி அங்கு பல கட்டுப்பாடுகள் ஏற்கனவே உள்ளது. உதாரணத்துக்கு இந்தியாவில் பரவலாக சமையலில் உபயோகப்படுத்தப்படும் கசகசாவை துபாய்க்கு யாரும் எடுத்து வரக்கூடாது என தடை உண்டு. தற்போது அதே போல் மருந்துகள் எடுத்து வரவும் அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

அமீரக அரசின் பொது சுகாதார செயலர் அல் அமின், “தங்களது சொந்த உபயோகத்துக்காக மருந்துகளை எடுத்து வரும் பயணிகளும் துபாயில் வசிப்போரும் தாங்கள் மருந்துகள் எடுத்து வருவதற்கான அனுமதியை பெற வேண்டும். இதற்கான படிவம் www.mohap.ae என்னும் இணைய தளத்தில் உள்ளது.

அதை தரவிறக்கம் செய்து அதில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அது மட்டுமின்றி அந்த மருந்துகளை உட்கொள்ள மருத்துவர் அளித்துள்ள மருந்துச் சீட்டும் இந்த விண்ணப்பத்துடன் இணைத்து அளிக்க வேண்டும். அந்த அனுமதி கிடைத்த பின்னரே பயணிகள் மருந்துகள் எடுத்து வர முடியும்.

துபாயில் வசிப்பவர் வெளிநாட்டில் இருந்து மருந்துகளைப் பெறவும் அல்லது இறக்குமதி செய்வதற்கும் தனி படிவம் உண்டு. இவ்வாறு வெளிநாட்டு மருந்துகள் ஒரு மாதத்துக்கான அளவு மட்டுமே அனுமதிக்கப்படும். மிகவும் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளுக்கு மட்டும் 3 மாத அனுமதி உண்டு.” என தெரிவித்துள்ளார்.