சென்னை: வரும் ஏப்ரல் மாதம் 10ம் தேதிக்குள் அனைத்துக் கல்வியியல் கல்லூரிகளும் தங்களுக்கென்று இணைதளம் ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது கல்வியியல் பல்கலைக்கழகம்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறையின்படி, கலை-அறிவியல் கல்லூரிகள் அனைத்தும் தமக்கென்று இணைதளத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

அதேபோன்று, தேசிய கல்வியியல் ஆசிரியர் கவுன்சில் என்ற அமைப்பும் விதிமுறைகளை உருவாக்கி, அதன்படி, அனைத்துக் கல்வியியல் கல்லூரிகளும்(பி.எட். கல்லூரிகள்), தமக்கென்று தனி இணையதளம் துவக்கி, அவற்றில், கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள், நிர்வாகிகள் பற்றிய விபரங்கள், மாணாக்கர்களுக்கான அறிவிப்புகள் ஆகியவற்றை வெளியிட வேண்டுமென கல்வியியல் பல்கலை சார்பில் உத்தரவிடப்பட்டது.

ஆனால், இந்த உத்தரவை பெரும்பாலான கல்வியியல் கல்லூரிகள் பொருட்படுத்தாமல் இன்னும் அலட்சியமாக உள்ளன.

எனவே, இப்பணியை ஏப்ரல் 10ம் தேதிக்குள் செய்துமுடிக்க வேண்டுமென கெடு விதித்து சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.