ஏப்ரல்-18 சித்திரை திருவிழா: தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு

மதுரை:

ப்ரல்-18ந்தேதி  சித்திரை திருவிழா அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் அதிகாரி நாளை நேரில் ஆஜராக வேண்டும் அல்லது, பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று  மதுரை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஏப்ரல் 18ந்தேதி மதுரை சித்திரைத்திருவிழா உள்பட பல கோவில் திருவிழாக்கள் நடைபெற உள்ளன. அன்றைய தினம் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.  தேர்தல் தேதியை மாற்றி வைக்க கோரி பொதுமக்கள்  கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பார்த்தசாரதி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு  நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தரம் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த விசாரணையின்போது,  கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  தேர்தலை பொறுத்தவரை வாக்காளர்களே முக்கிய மானவர்கள். திருவிழா நேரத்தில் நகருக்குள் நுழைவதே சிரமமான ஒன்று. அப்படியிருக்கும்போது வாக்காளர்கள் எப்படி வாக்குசாவடிக்கு செல்வார்கள்? என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இதுகுறித்து  தலைமை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை 14 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

அதன்படி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில்  ஆஜரான வழக்கறிஞர், ஏப்ரல் 18 ஆம் தேதி மீனாட்சியம்மன் கோயில் திருத்தேரோட்டத்தை முன்னிட்டு , மதுரையில் தேர்தலை தள்ளி வைக்க முடியாது  என தெரிவித்தார்.

இதையடுத்து, இது தொடர்பாக  தமிழக தேர்தல் அதிகாரி நாளை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் அல்லது, நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

கார்ட்டூன் கேலரி