ஏப்ரல்18-பெரிய வியாழன்: தமிழகத்தில் தேர்தலை ஒத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி

சென்னை:

மிழகத்தில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18ந்தேதியன்று, கிறிஸ்தவர்களின் புனித நாளான பெரிய வியாழக்கிழமை நோன்பு நாளாக இருப்பதால், அன்றைய தினம்  தேர்தல் நடைபெறுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. சிலுவையில் இயேசு மரிப்பதற்கு முதல்நாள் பெரிய வியாழனாக அனுசரிக்கப்படும். அந்த நாளில் இயேசு தனது சீடர்களின் பாதங்களை கழுவி, அவர்களுடன் உணவருந்தியதை நினைவுபடுத்தும் விதமாக பாதம் கழுவும் சடங்கு நடைபெறும். இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படும்.

தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் ஏப்ரல் 18 வியாழக்கிழமை. அன்றைய தினம் பெரிய வியாழன். எனவே,  தேர்தல் தேதியை மாற்றி வைக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில்,  கிறிஸ்தவ பள்ளிகளிலும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படு வதால், இந்த பள்ளிகளுடன் இணைந்து இருக்கும் தேவாலயங்களில் வழிபாடு நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இம்மனு மீதான விசாரணை  நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வில் நடைபெற்றது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஏற்கனவே இதுபோன்ற கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, இந்த மனுவையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published.