ஏ.ஆர்.முருகதாஸ் கைது?

திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியான திரைப்படம் சர்கார் இப் படம் வெளியாக இருந்த நிலையில் கதை திருட்டு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்பட்டது. எல்லாவற்றையும் சமாளித்து படம் வெளியானது.

அதன் பிறகும் ஒரு பிரச்சினை ஏற்பட்டது. அரசின் இலவச பொருட்களை தீயில் போட்டு எரிப்பது, வில்லி கதாப்பாத்திரத்திற்கு கோமளவள்ளி என்று பெயர் சூட்டியது உள்ளிட்ட சில காட்சிகளுக்கு ஆளும் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அக்கட்சியினர் படத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இதைத்தொடர்ந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் கோரி இயக்குநர் முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 9 ஆம் தேதி மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் அரசு தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் பதிலளித்த தமிழக அரசு, அரசையோ அரசின் திட்டங்களையோ விமர்சிக்க மாட்டேன் என முருகதாஸ் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அரசை விமர்சித்ததற்காக முருகதாஸ் மன்னிப்பு கோர வேண்டும் என்றும்  தெரிவித்தது.

இதற்கு, நீதிமன்றத்தில் பதிலளித்த முருகதாஸ், அரசின் திட்டங்களை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும்  இனி வரும் படங்களில் அரசின் திட்டங்களை விமர்சிக்க மாட்டேன் என உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில்  சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை வைத்ததாக   சென்னையைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் இயக்குநர் முருகதாஸ் மீது மூன்று பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து ஏ.ஆர் முருகதாஸ் மீது வன்முறையை தூண்டுவது, இரு பிரிவுகளிடையே வன்முறையைத் தூண்டுவது, அரசின் திட்டங்களை அவதூறு செய்வது ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடுமையான பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஏ.ஆர். முருகதாஸ் கைது செய்யப்பட்டலாம் என்று கூறப்படுகிறது.