டில்லி

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தை மீண்டும் இயங்க வைக்க அரபு தொழிலதிபர் முராரி லால் ஜலன் ரூ.1000 கோடி முதலீடு செய்ய உள்ளார்.

இந்தியாவின் மிகப்பழமையான தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த வருடம் ஏப்ரல் 18 ஆ தேதியுடன் தனது சேவையை நிறுத்திக் கொண்டது.  அந்த நிறுவனம் தனது ஊழியர்கள், பொருட்கள் அளித்தோர், மற்றும் குத்தகை தாரர்களுக்கு சுமார் ரூ.8000 கோடிக்கு மேல் அளிக்க வேண்டி உள்ளது.

அந்நிறுவனத்தை மீண்டும் இயங்க வைக்க ஐக்கிய அரபு அமீரக தொழிலதிபர் முராரி லால் ஜலன் முன் வந்துள்ளார்  அவர் இங்கிலாந்தைச் சேர்ந்த கர்லோக் கேபிடல் நிதி நிறுவனத்துடன் இணைந்து ரூ.1000 கோடி வரை ஐந்து ஆண்டுகளில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   அத்துடன் இந்த குழு சீரமைப்பு பணிகளுக்குத் தேவையான பிணை சொத்துக்களையும் அளிக்க முன் வந்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி முராரி லால் மற்றும் கர்லோக் கேபிட்ல இணைந்து இந்த நிறுவத்தை வாங்க அளித்த ஒப்பந்தப்புள்ளி ஏற்கவில்லை என்றாலும் மற்ற பங்குதாரர்கள் எடுத்த முடிவின்படி நிறுவனத்தை மீண்டும் இயங்க வைக்க இவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதில் கர்லோக் நிறுவனம் முதல் இரு வருடங்களுக்குள் ரூ.380 கோடி அளிக்க முன்வந்துள்ளது.   மூன்று மற்றும் ஐந்தாம் வருடத்துக்குள் ரூ. 580 கோடியும், பிணையாக ரூ.250 கோடியும் அளிக்க இந்நிறுவனம் முன்வந்துள்ளது.   அத்துடன் பணம் நிலுவையில் உள்ளவர்களுக்கும் மூன்றாம் வருடத்தில் இருந்து பாக்கியைத் திருப்பித் தரவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.   இதைத் தவிரக் கடன் கொடுத்தோருக்குப் பணம் திருப்பித் தரும் வரை 9.5% ஈவுத்தொகை அளிக்கப்பட உள்ளது.