கோபி நயினார் இயக்கிய அறம் படம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

சமூகவலைதளங்களில் அவரை பலரும்  புகழ்ந்துவருகிறார்கள். அதே நேரம், “கோபி நயினாரின் கதையைத் திருடி கத்தி படத்தை எடுத்தார் ஏ.ஆர். முருகதாஸ்: மெட்ராஸ் படத்தை எடுத்தார் பா.ரஞ்சித்” என்று அந்த இருவரையும் கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள்.

இந்த இரு படங்களின் கதையும் தன்னுடையது என்று நீதிமன்றம் வரை சென்று கோபி நயினார் போராடியது அனைவரும் அறிந்த செய்தி.

இந்த நிலையில் அறம் படத்தை வாழ்த்தி, பா.ரஞ்சித் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். ஆனால் அதில் இயக்குநர் கோபி நயினார் பெயரைச் சொல்லாமல், “தோழர் நயன்தாரா” என்று மட்டும் குறிப்பிட்டார்.

அவரது “இருட்டடிப்பு  ட்விட்” நெட்டிசன்களை ஆத்திரமுறச் செய்தது. பா.ரஞ்சித்தை மீண்டும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில், “பா.ரஞ்சித்தை எனது நலம் விரும்பிகள் கடுமையாக விமர்சிக்க வேண்டாம்” என்று கோபி நயினார் கேட்டுக்கொண்டார். ஆனாலும் பா.ரஞ்சித் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் மீதான கண்டனங்களை நெட்டிசன்கள் நிறுத்தியபாடில்லை.

ஜனனி ரமேஷ்

இந்த நிலையில் அறம் இயக்குநர் கோபி நயினாரின் உதவி இயக்குநர் ஜனனி ரமேஷ் என்பவரே பா.ரஞ்சித் மற்றும் ஏ.ஆர். முருகதாஸை கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருக்கிறார்.

அவர் தனது முகநூல் பதிவில்,

“எங்கள் இயக்குநரின் முதல் திரைப்படம் “கருப்பர் நகரம்” இது.

சென்னையின் பூர்வீக குடிகளை பற்றிய கதை.

ஒருசில காரணங்களால் அத்திரைப்படம் தாமதமானது இந்த கதையை களவாடி
இன்னொரு திரைப்படமாக வெளிவந்து அனைவராலும் பாராட்டு பெற்று பெரிய வெற்றிபெற்றது.

அதன் இயக்குநர் எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் தன் சொந்த சிந்தனையென்று தொலைக்காட்சிகளில் பேட்டியளித்தது இன்னும் கண்முன் நிற்கிறது.

நம்பிக்கை துரோகத்தால் எங்கள் இயக்குநரின் குரல் சென்னையின் எல்லா வீதிகளில் ஒலித்தபோது அரசியல் பின்னணிகள் சத்தமில்லாமல் வாயடைத்தது.

ஜனனி ரமேஷ் பதிவு

 

எங்கள் இயக்குநரின் அறிவை திருடி இரவல் புகழ் அடைந்த அனைவருக்கும் “அறம்” சமர்ப்பணம்.
இன்று  இந்திய சினிமாவே பாராட்டும்போதும்  உலக சினிமாவுக்கான உன்னத பயணத்தில் எங்கள் இயக்குநர்.

மாலைகள் அணிவகுத்தபோதும் தோழமைகளுக்காக தோள் கொடுத்து நிற்கும் தோழர்! எங்கள் அண்ணன் ந.கோபிநயினார்.

அவரின் உதவி இயக்குநர் என்பதில் நான் பெருமை அடைகிறேன்.!” என்று தெரிவித்துள்ளார் ஜனனி ரமேஷ்.

விடாது கருப்பு!