காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்ட அறந்தாங்கி பெண் உயிரிழந்தார்..

திருச்சி:

காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து துன்புறுத்தியதாக  கூறி தீக்குளித்த அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காந்தி நகரைச் சேர்ந்தவர் பாண்டி என்கின்ற ராஜேந்திரன் என்பரிவன் மனைவி செல்வி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக செல்வி திருட்டு நகை ஒன்றை வாங்கி விற்றதாக கூறப்படுகிறது.

அதையடுத்து, கடந்த 15 நாட்களுக்கு முன்பு, அவரை காவல்துறையினர் விசாரணை  என்ற பெயரில் அடிக்கடி காவல் நிலையத்திற்கு அழைத்து துன்புறுத்தியதாக, காவல்நிலைய வாசலில்,  திடீரென உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீயை பற்ற வைத்துக்கொண்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த  காவலர்கள், உடனடியாக தீயை அணைத்து ஆம்புலன்ஸ் மூலமாக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடல் முழுவதும்  தீக்காயம் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சாத்தான்குளத்தில் தந்தை மகன், காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட நிலையில், அறந்தாங்கி சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.