Random image

‘ஊதிய உயர்வு’ கேட்ட தொழிலாளர்களுக்கு ‘நோட்டீஸ்’ கொடுத்த தமிழக அரசு

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்தில் பணி செய்யும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு ஒப்பந்தம் உள்பட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4ந்தேதி   முதல் ஒத்துழை யாமை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அவர்களின் கோரிக்கை குறித்து செவிசாய்க்காத தமிழக அரசு,  ஒத்துழை யாமை இயக்க போராட்டம் நடத்தும் அரசு ரப்பர் கழக ஊழியர்களுக்கு  நோட்டீஸ் கொடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டத்தில் ஏராளமான ரப்பர் மரங்கள். உள்ள அதில் இருந்து எடுக்கப்படும் பால் மூலம் ரப்பர் தயாரிக்கப்பட்டு வருகிறது.  ரப்பர் மரங்களில் பால் வெட்டுதல், பால் சேகரித்தல், தோட்டப் பராமரிப்பு எனப் பல்வேறு பணிகளுக்காக நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

அரசு ரப்பர் கழகத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர் களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த 2016 ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் நிறைவடைந்து விட் டது. இதன் காரணமாக, அடுத்த 3 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தம் குறித்து இந்த 2 ஆண்டு களில்  பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் இதுவரை அரசு சரியான முடிவு எடுக்காமல் இழுத்தடித்து வருகிறது.

அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழிற்சங்கங்கள் ஏற்கனவே கொடுத்துள்ள நோட்டீஸ்படி, கடந்த 4ந்தேதி முதல்  ரப்பர் கழக நிர்வாகத்திற்கு எதிராக ஒத்துழையாமை போராட்டத்தை தொடங்கினர்.

அதையடுத்து மீண்டும்,  தொழிற்சங்க நிர்வாகிகளுடன், ரப்பர் கழக நிர்வாக இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிலும் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஊதிய உயர்வு கேட்டு ஒத்துழையாமை போராட்டம் நடத்தும் அரசு ரப்பர் கழக ஊழியர்களுக்கு அரசு நோட்டீஸ் விநியோகித்து உள்ளது. அந்த நோட்டீசில், “ஒரு கிலோ காய்ந்த ரப்பர் ரூ.80 முதல் ரூ.100 வரை விலை மதிப்புள்ளதாகும். வழக்கமாக வழங்கி வந்த ரப்பரைவிட குறைந்த எடையில் ஊழியர்கள் ரப்பர் வழங்கி வருவதாகவும், அதற்கான தொகை உங்களிடம் இருந்து வசூல் செய்யப்படும்” என கூறப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு கேட்டு போராடும் தொழிலாளர்களிடம், ரப்பருக்கான தொகை வசூலிக்கப்படும் என்று அரசு நோட்டீஸ் வழங்கியிருப்பது  தொழிலாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.