சென்னை,
ரவக்குறிச்சி தொகுதியில் பாரதியஜனதா வேட்பாளர் முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசை வலியுறுத்தி உள்ளார்.
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.
அரவக்குறிச்சியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஏராளமான முகவர்கள் குவிந்ததால், முகவர்களுக்கு உட்கார இடம் இல்லை என்று கூறி தேமுதிக, பாஜக வேட்பாளர்கள் போராட்டம் நடத்தியதால், போலீசார் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதனால் வாக்கு எண்ணும் பணியில் தாமதம் ஏற்பட்டது.
தேர்தல் அதிகாரிகளின் சமாதானத்தை தொடர்ந்து, 45 நிமிடங்கள் தாமதமாக 8.45 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. எனவே முதல் சுற்று முடிவு காலை 9.15 மணியளவுக்கே வெளியானது.
பாரதியஜனதா, தேமுதிக வேட்பாளர்கள் அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தப்பட்டது குறித்து தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை சந்தித்து மனு கொடுத்தார்.
tamil-photo
பின்னர்  நிருபர்களிடம் கூறியதாவது:-
இடைத்தேர்தலை பல கட்சிகள் சந்திக்க மறுத்த நிலையில்,  களத்தில் இருந்தால்தான் களங்கத்தை துடைக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் தேர்தலை சந்தித்தோம்.
பணத்துக்கும், அதிகாரத்துக்கும் அடிபணியாமல் இவ்வளவு வாக்குகளை அளித்து பாரதிய ஜனதாவுக்கு 3-வது இடத்தை மக்கள் வழங்கி இருக்கிறார்கள். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
பணப் பட்டுவாடாவை தடுத்து இருந்தால் முதல் அல்லது 2-வது இடத்தை பிடித்து இருப்போம்.
அரவகுறிச்சி தொகுதியில் ஆரம்பத்தில் இருந்தே வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடக்க வில்லை.
எங்கள் முகவருக்கு இடம் ஒதுக்கப்பட வில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பா.ஜனதா வேட்பாளரை கைது செய்து அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.
வேட்பாளர் மேற்பார்வை இல்லாமல் வாக்குகள் எண்ணப்பட்டது தவறு. எங்கள் வேட்பாளரை அழைத்து மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.
ஆனால் நடைமுறை சிக்கல்களை சுட்டிக்காட்டி வீடியோ பதிவுகளை காட்டுவதாக தேர்தல் அதிகாரி கூறி இருக்கிறார். அப்படியானால் ஏஜெண்டுகள் நியமிக்கப்படுவது எதற்கு?
இவ்வாறு அவர் கூறினார்.