கரூர்:

மிழகத்தில் காலியாக இருந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில்,  அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இன்று தனது  வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம்  கடந்த12ந்தேதி அறிவித்தது.  அதன்படி,  திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

ஏப்ரல் 22ந் தேதி (திங்கட்கிழமை) வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது.  ஏப்ரல் 29ந் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள், ஏப்ரல் 30ந் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை மே 23ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து, அதிமுக, திமுக, அமமுக தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டனர்.

இந்த நிலையில்,  அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி மீனாட்சியிடம் மனு தாக்கல் செய்தார். அவருடன்  கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி மற்றும் பலர் உடன் சென்றிருந்தனர்.

பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த  செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்கு பின்னர், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்கப்பட்டு, ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என்று கூறினார்.