சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது 110 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு இதுவரை 4200 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 24,000 பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இதில் 64 இந்திய குடிமக்கள் மற்றும் 17 வெளிநாட்டினர் அடங்குவார்கள். 17 வெளிநாட்டினர்களில் 16 பேர் இத்தாலியர்கள் மற்றும் 1 கனடா நாட்டை சேர்ந்தவர்.

இப்படி கொரோனா வைரஸ் பீதியில் மக்கள் உள்ள நிலையில் கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக சில யோசனைகளைத் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார் அரவிந்த்சாமி.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

”சர்வதேச அளவில் இருக்கும் வைரஸ் தொற்று பற்றி என் சிந்தனைகள். உலகின் மற்ற நாடுகளை விட நம் நாட்டில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போதைக்குக் குறைவாகவே உள்ளது.

அடுத்து தெளிவான தகவல் கிடைக்கும் வரை தற்காலிகமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளை மூட, பொது நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்த, பெரிய எண்ணிக்கையில் மக்கள் கூடும் எந்த நிகழ்ச்சியையும் ஒத்திவைக்க அரசாங்கம் யோசிக்க வேண்டும் எனக் கோருகிறேன்.

இந்த கோவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் மற்ற அரசுகளின் ஆய்வுகளை வைத்து, அதைக் கருத்தில் கொண்டு அரசு செயல்படும் என நான் நம்புகிறேன்.

இது சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் அசாதாரணமான சூழல் மற்றும் அதன் தாக்கம். அரசாங்கம் மட்டும் தனியாக இதை எதிர்த்துப் போராட முடியாது. அதனால், நாம் ஒவ்வொருவரும் பொறுப்புள்ள குடிமகனாக இருந்து, கண்டிப்பான சுகாதார முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

அறிகுறிகள் இருந்தால் அதை உரியவர்களுக்குத் தெரிவித்து, இந்த தொற்று பரவ வாய்ப்பு இருக்கும், மக்கள் அதிக எண்ணிக்கையில் கூட வேண்டியிருக்கும் விழாக்களை நடத்தாமல், இது போன்ற சூழலில் தேவையான எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.

அமைதியாக, பாதுகாப்பாக இருங்கள்”.என கூறியுள்ளார் .