ராமகிருஷ்ண மட கிறிஸ்துமஸ் விழா அழைப்பை ஏற்றுக் கொண்ட கிறித்துவ பேராயர்

கொல்கத்தா

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட விழாவில் கலந்துக் கொள்ள ராமகிருஷ்ண மடம் அழைத்துள்ளதை கிறித்துவ பேராயர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் மறைவுக்கு நான்கு மாதங்கள் கழிந்த பின் கடந்த 1886 ஆம் வருடம் டிசம்பர் மாதம் சுவாமி விவேகானந்தர் சில சீடர்களுடன் அனந்தப்பூரில் உரையாடிக் கொண்டிருந்தார்.   அப்போது அவர்கள் சன்னியாசம் பெற விரும்பியதால் அவர்களுக்கு அந்த உரையாடல் நிகழ்ந்த அடுத்த நால் சன்னியாசம் அளிக்கப்பட்டுள்ளது.

பேராயர் தாமஸ் டிசௌசா

அவர்கள் சன்னியாசம் பெற்ற நாள் கிறிஸ்துமஸ் தினமாகும்.   அதை நினவில் கொள்ள ஒவ்வொரு வருடமும் ராமகிருஷ்ணா மடம் சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.    அதை ஒட்டி ஏசு கிருஸ்து மற்றும்  மேரி மாதாவின் படங்கள் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது.   கிறிஸ்துமஸ்க்கு முதல் நாள் மாலையில் இருந்து கிறிஸ்துமஸ் கீதங்களுடன் இந்த விழா தொடங்கப்படுகிறது.

சுவாமி சுவிரானந்தா

இந்த வருட கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ள கிறிஸ்துவ பேராயர் தாமஸ் டிசௌசாவுக்கு ராமகிருஷ்ண மட தலைவர் சுவிரானந்த அழைப்பு விடுத்துள்ளார்.   கிறிஸ்துமஸ் தினத்தன்று பேராயர் பல தேவாலயங்களின் பிரார்த்தனையில் கலந்துக் கொள்வது மட்டுமே வழக்கமாகும்.   மற்ற இடங்களுக்கு அவர் அன்று செல்வது கிடையாது.

இந்நிலையில் தேவாலய அதிகாரிகள் கிறிஸ்துமஸ் தினத்தன்று பேராயர் தாமஸ் டிசௌசா ராமகிருஷ்ண மடத்துக்கு செல்ல ஒப்புக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.    பேராயர் மதங்களிடையே பரஸ்பர மரியாதையை உருவாக்க இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.